ஊர்காவற்துறை படுகொலை சந்தேக நபர்கள் 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி, அடையாள அணிவகுப்பின் போது தம்மை அடையாளம் காட்ட வேண்டாம் என தெரிவித்து 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சியமாக உள்ள சிறுவன் தம்மை அடையாளம் காட்ட வில்லை என்றால் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருவோம் என சந்தேக நபர்கள் குறிப்பிட்டதாக சட்டத்தரணி ஊடாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் உறவு முறையை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் கொலைச் சந்தேக நபர்கள் இவ்வாறு பேரம் பேசியுள்ளனர்.

இது குறித்து சிறுவனின் தாயாருக்கு சிறுவனின் உறவினர் அறியப்படுத்தியதையடுத்து, நேற்று (திங்கட்கிழமை) குறித்த விடயம் சட்டத்தரணி ஊடாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து, சிறுவனின் உறவு முறையை சேர்ந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரிடம் வாக்குமூலம் பதிந்து இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர்களான சகோதர்கள் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா வயது 27 எனும் பெண் படுகொலை செய்யபட்டார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள் அன்றையதினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல்துறையின் காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

Related Posts