ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்ற முயற்சி?

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மன்றில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு நேற்ற திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் இடம்பெற்றது. அதன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் மன்றில் தெரிவிக்கையில்,

சந்தேக நபர்கள் இருவரும் கொலை இடம்பெற்ற சமயத்தில் மருதனார்மடம் பகுதியில் நின்றதாகவும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் கண்காணிப்பு கமராவை பரிசோதிப்பதன் மூலம் அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இதுவரையில் போலீசார் கண்காணிப்பு கமரா பதிவு தொடர்பில் மன்றில் அறிக்கை எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதனை மன்றில் சுட்டிக்காட்டுகிறேன். அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தனக்கு சில தகவல்கள் தெரியும் அதனை நீதிமன்றில் தெரிவிக்க வேண்டுமாயின் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சந்தேக நபர்களாக தடுத்து வைக்கபப்ட்டு உள்ளவர்களிடம் ஜெகதீஸ்வரன் என்பவர் பேரம் பேசியதை தான் கேட்டேன் என பிறிதொரு குற்றத்திற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மகிந்தன் என்பவர் வாக்கு மூலம் அளித்து இருந்தார்.

ஆனால் ஜெகதீஸ்வரன் பேரம் பேசியதாக கூறப்படும் காலப்பகுதியில் ஜெகதீஸ்வரன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கவில்லை என தெரியவருகின்றது. சிறையில் ஜெகதீஸ்வரன் இல்லாத கால பகுதியில் சிறைக்குள் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது வழக்கினை திசை மாற்றும் நடவடிக்கையாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இது தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்துமாறு நீதிவான் ஊர்கவர்துறை பொலிசாருக்கு உத்தரவு இட்டார். அத்துடன் வழக்கினை எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

Related Posts