ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் மீதான படுகொலை வழக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளி இவரே என ஒருவரை குறித்து அவர் தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் ஊடகவியலாளர்கள் சிலருக்கு இனந்தெரியாத ஒருவரால் அனுப்பப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் இடத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாத சிலரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரது ஆடையில் இரத்தக்கறை காணப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பத்தில் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார். இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி திருக்குமார், குறித்த சந்தேகநபரது ஆடையில் இருந்த இரத்தக்கறையானது அவருக்கு ஏற்பட்ட விபத்தொன்றால் அவ் இரத்த கறை அவரது ஆடையில் ஒட்டியிருந்ததாகவும், அவர் அவ் விபத்தில் காயமடைந்த போது வேலணையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, குறித்த கொலை சம்பவம் இடம்பெற்ற பின்னர் இக் கொலை சம்பவத்தை மேற்கொண்ட உண்மையான குற்றவாளி இவரே என முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஒருவரது புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான தகவல்களுடன் சில ஊடகவியலாளர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த விடயத்தை நீதிவானுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் இவ் வழக்கின் விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு பாரப்படுத்துவது தொடர்பாகவும் பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தார். சட்டத்தரணிகளது வாதங்களையடுத்து நீதிவான், குறித்த சந்தேகநபர் தாம் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றதாக கூறும் விடயம் தொடர்பிலும், அவ் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாகவும் விசாரணை செய்யுமாறும் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் வழக்கின் தற்போதைய நிலையில் இவ் வழக்கை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டதுடன் இவ் வழக்கின் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.