ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்ற குற்றசாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது அலைபேசியும் பறித்து சென்றது.

நாடுமுழுவதும் கோரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது தமிழ்க் கொடி எனும் அமைப்பு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அவர் பதிவொன்றினை இட்டிருந்தார்.

பதிவினை நீக்க கோரி தமிழ்க் கொடி எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்ததுடன் மிரட்டலும் விடுத்திருந்தனர். அதற்கு ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , அவரது அலைபேசியையும் பறித்து சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , தாக்குதல் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts