முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதோர் இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய ஆவா குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) இரவு 8.45 மணியளவில் மல்லாவிப் பகுதியில் இருந்து வாள் மற்றும் கொட்டன் ஆகியவற்றுடன் இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இளைஞர்களால் பாலைப்பாணிச் சந்திக்கு அண்மித்த பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாங்குளம் சந்திக்குச்சென்ற குறித்த குழுவினர் உணவகம் ஒன்றின் முன்பாக நின்ற இளைஞர் ஒருவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞன், மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதல் நடத்திய குறித்த குழுவினரை, மாங்குளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் துரத்திச் சென்றபோது, அதில் இருந்த ஒருவரை மடக்கிப்பிடித்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டு மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.