யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகரச் செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“யாழ்.மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற பார்வையாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக வருகை தருகின்ற ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு அமர்வுகளின்போதும் கௌரவ முதல்வர் அவர்களிடமிருந்து எழுத்துமூல முன்னனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
யாழ்.மாநகரசபையின் மாதாந்த பொதுக் கூட்ட, விசேட கூட்ட அமர்வுகளின்போது கௌரவ முதல்வர், கௌரவ பிரதி முதல்வர், கௌரவ உறுப்பினர்கள், மாநகரசபை அமர்வுகளுடன் தொடர்புடைய மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர்ந்த வேறு எவரும் மாநகர சபா மண்டபத்தினுள் உள்நுளைவது தடை செய்யப்பட்டுள்ளது“ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.