ஊடகவியலாளர்களுக்கு ஐஸ் கதை கூறிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்!

pasil-rajapakshaஎதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இன்றி நியாயமானதும் நீதியுமான முறையில் மிக அமைதியான முறையில் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருப்பதாக’ ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘வட மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடு என்பது ஐஸ் கதை போன்றது’ என்று கூறி அக்கதையினையும் விளக்கினார்.

‘ஒரு ஊரில் ஐஸ் மலையொன்று இருந்ததாம். அந்த மலையில் ஒருவர் தங்கியிருந்தார். ஒருமுறை, அதே கிராமத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த மலையில் ஏறினார். மலையில் தங்கிருந்தவரின் வீட்டிற்கு சென்ற கிராமத்தவர், தனது இரு கைகளையும் ஊதிக்கொண்டிருந்தார்.

அப்போது ஐஸ் மலை மீது இருந்தவர், ‘ஏன் கைகளை ஊதிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கிராமத்து நபரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கிராமத்தவர், ‘குளிராக இருக்கின்றது. அதனால் ஊதிக்கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

அதைக் கேட்ட ஐஸ் மலை மீது இருந்தவர், சூடான சூப் கொண்டு வந்து கொடுத்தார். சூப்பைக் கையில் எடுத்த கிராமத்தவர் அதையும் ஊதிக் கொண்டிருந்தார். அதை அவதானித்த ஐஸ் மலை மீது இருந்தவர், ‘மீண்டும் ஏன் ஊதுகிறீர்கள்?’ என கேட்டார். அதற்கு பதிலளித்த கிராமத்தவர்’ சூப் சூடாக இருக்கின்றது. அதனால் ஊதுகிறேன்’ என்று கூறினார்.

அதற்கு ஐஸ் மலை மீது இருந்தவர் ‘இவர் பொய்க்காரர்’ எனக் கூறி அவரை அடித்து விரட்டினார். இந்த கதையைப் போன்று தான் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடு இருப்பதாக கூறும் விடயமும் இருக்கிறது என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

‘தென் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இங்கு பார்க்கும் போது, இராணுவ தலையீடு அதிகமாக இருப்பது போன்று தான் தோன்றுகின்றது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமையினையும், தற்போது உள்ள நிலைமையினையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்’ என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts