ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கடிதம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கண்டனங்கள் வெளிவரும் நிலையில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுய கௌரவத்தினை பாதுகாத்து தருமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர்கள், “சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் மௌனம் காப்பதானது இலங்கையில் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
நேற்றைய சம்பவம் போன்று பல சம்பவங்கள் கடந்த சில காலமாக தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படல் மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்களுக்கு உள்ளாதல் போன்ற சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, அவர்களின் குடும்ப மற்றும் தனி மனித கௌரவம் ஆகியவற்றை பாதுகாத்து கொடுக்க வேண்டிய தார்மீக கடமை தங்களிடம் உள்ளது.
இயற்கைக்கு எதிரான மனித செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளிற்கு ஒத்துழைக்காதும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்காதும் செயற்படும் அரச அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.