யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற யாழ்ப்பாணப்பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவரை சிவில் உடையில் நின்ற ஒருவர் தாக்கியுள்ளதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டார் என பொலிஸ் நிலையத்தில் சம்பவ தினமே முறைப்பாடு செய்யப்பட்டது.
அத்துடன் தாக்கியவரின் புகைப்படமும் எங்களுடன் முறைப்பாட்டுக்காரரால் வழங்கப்பட்டது. அதனையடுத்து நாம் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணம் போக்குவரத்து பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சிவில் உடையில் இருந்தார் என்றும் அவரே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது.
எனினும் அவருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்க முடியாது இருந்தது. ஏனெனில் போக்குவரத்து குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளை குறித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே மேற்கொண்டு வந்தார்.
தற்போது அவருடைய பொறுப்புக்கள் மீளெடுக்கப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது. குற்றமிழைத்தவராக கண்டறியப்படும் இடத்து தண்டனையும் வழங்கப்படும் என்றார்.
தொடர்புடைய செய்தி