போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், தமிழ் மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவித்து வாழ்வை வெறுமையாகவும், வேதனையோடும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை ஊடகங்கள் ஏற்படுத்த முனைவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனம் சார்ந்து மக்களின் ஈடுபாட்டைத் தூண்டுவதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்த முனையும் ஊடகங்களால் உயிரச்சம் கலந்த நம்பிக்கையற்ற வாழ்க்கை நிலைக்குள் எம்மக்களை தள்ளிவிட முடியுமே தவிர, மக்கள் பாதுகாப்பான நம்பிக்கை தரும் ஒரு சூழலை நோக்கி நகர்வதற்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குண்டு சத்தங்கள் ஒய்ந்து போயுள்ள இன்றைய இந்தச் சூழலில் முற்றிலும் மாறுபாடான புதிய சமூக நிலமையொன்றுக்குள் மக்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். யார் எமது இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்று நீண்டகாலமாக கூறிவந்தோமோ அவர்களது பாதுகாப்பின் கீழேயே இன்று எமது மக்கள் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
வாசகர்களையும் பொது மக்களையும் வாசிக்கத் தூண்டுவதற்காக இந்த எழுத்து முறைமைகள் அவலத்திலிருந்து மீண்டெழ முனையும் எம்மக்களை மீளவும் படுகுழிக்குள் தள்ளி வீழ்த்தும் செயலாகவே அமைந்துவிடும்.
தமது செய்திகளை அல்லது தகவல்களை அறிந்து கொள்ளும் வாசகர்களுக்கு தம்மை நோக்கிய ஒரு பதிவை நிலை நிறுத்த முனையும் இந்த ஊடகங்கள் தம்மை அறியாமலே எம் மக்களின் மனங்களின் அவநம்பிக்கையை தோற்றுவித்து அதன் வழியே பாதுகாப்பற்ற சூழலை காட்ட முனைவது துரதிஸ்டவசமானதொரு நிகழ்வாகும்.
இனம், மொழி சார்ந்து தமக்கான வாசகர் வட்டத்தையும் அதனூடான சமூக அணியினையும் சிருஷ்டிக்க முனையும் எமது ஊடகங்கள் இன்றைய நிலையில் பாதுகாப்பான சூழலொன்றை மக்கள் உணர்வதற்கான செய்தி முறைமையை கைக்கொள்ள தம்மை பரிச்சயப்படுத்திக் கொள்வதே ஊடகங்களுக்கு பொருத்தமான ஒரு செயற்பாடாக இருக்கும்.
இனம் சார்ந்து சிந்திக்க புறப்பட்டதன் விளைவாக முழு நம்பிக்கையையும் நாமே தொலைத்து விட்டதன் பின்னர் புறத்தே நாம் வாழும் சூழலை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான உத்வேகமும் அதை நோக்கிய சிந்தனை முறைமையுமே எம் அனைவரினதும் முன்னாலுள்ள அவசியத் தேவையாகும்.
விரும்பியோ விரும்பாமலோ விடுதலைக்காக அனைத்தையும் இழப்பது என்கிற தொனிப் பொருளில் அனைத்து உயிர், உடமை இழப்புக்களும் அரங்கேறியிருக்கின்றன. இவை நம் தமிழ் தேசம் மக்களுக்கான நலன்களை அடிப்படை உரிமைகளை நேர்மையாக உண்மையாக வென்று கொள்வதில் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதனை நம் ஊடகங்கள் பட்டறிந்து உணர்ந்த பின்னும் தமது எழுத்துக்களால் வெறுப்பின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குள் எம்மக்களை தள்ளிவிட முயற்சிப்பது தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கும் செயலாகும் என தனது ஊடக அறிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.