ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டணம்

ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண கிளை  கண்டணம் வெளியிட்டுள்ளது. அவர்களது கண்டன அறிக்கை வருமாறு ” முன்பெல்லாம் சில ஊடகங்களில் வரும் செய்திகளை பெரும்பாலும் நம்புவதற்கும, பார்த்துவிட்டு சிரித்து விடவும் பழகி இருந்தோம். அப்போது பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் உண்மை செய்திகளை தெரிவு செய்து போடுவதற்கும், சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்திய பின்னர் வெளியிடுவதற்கும், சாதாரண மக்களை பிழையாக வழிநடத்தாமல் இருப்பதற்கும் முக்கியத்துவம் வழங்கினார்கள்.

ஆனால் இப்பொழுதெல்லாம் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர் எல்லாம் ஒரு ஊடகத்திற்கு உரிமையாளராக இருப்பதற்கு உரிய முறையில். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தனியே சட்டங்களினால் மாத்திரம் தடுத்து விட முடியாது. நமது மக்களில் பெரும்பாலான புத்திசாலிகள் அல்லது புத்திசாலிகளை தமது நண்பர்களாக கொண்டவர்கள். அவர்களுக்கு தெரிந்திருக்கிறது “நான் சொல்வது ஒன்று, நீ சொல்வது இன்னொன்று, ஆனால் உண்மை வேறு ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது”. ஆனாலும் சில ஊடகங்களின் தொடர் பொறுப்பற்ற செயற்பாடுகள் சாதாரண மக்களை பிழையாக வழி நடத்துவதிலும, அரச திணைக்களங்களில் உண்மையாக சேவை செய்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதிலும் வெற்றி கண்டு வருகின்றன.

இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவத்தினை இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்கும் ஒரு சாராருடன் இணைந்து பணத்திற்காகவோ அல்லது வேறு பலம் வாய்ந்த பதவிகளை பெறுவதற்காகவோ எந்தவித துறைசார் அறிவு இன்றி. அல்லது துறை சார்ந்தவர்களிடம் ஆலோசிப்புமின்றி தன்னிச்சையாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். மருத்துவத் துறை சார்ந்தவர்கள் இவற்றை சாதாரணமாக கடந்த செல்வதற்கு பழக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்குள் மக்கள் இதை எவ்வாறு சிந்திப்பார்கள் என்ற சிந்தனை எழுவதை தடுக்க முடியாது. உதாரணமாக அண்மையில் பொதுமக்களின் படகில் நடந்த பிரசவம் என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அதன் உண்மை தன்மையை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்ட செய்திக்கு கொடுக்கவில்லை.

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைப்பதிலும்[ குறிப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை.], வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை இலக்கு வைப்பதிலும் சில ஊடகங்கள் குறியாக உள்ளன. இதன் விளைவுகள் உடனே இல்லாவிட்டாலும் சில வருடங்களில் இலவச மருத்துவ சேவையையும் வினைத்திறன் உள்ள நிபுணத்துவ சேவையையும் நிச்சயமாக பாதிப்படைய செய்யும். ஆனால் தமது தனிப்பட்ட அடைவுகளுக்காக இதனை செய்பவர்களுக்கு இது தெரியாமல் இல்லை.”

Related Posts