“கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் – துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. இந்த விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபையும் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். அத்துடன் இயலுமானவரை மக்களுக்கு உதவ வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா.
மானிப்பாய் தொகுதிக் கிளை நிர்வாகிகளை தெரிவுசெய்யும் கூட்டம் உடுவில் பிரதேச சபை மண்டபத்தில் பெ.கனகசபாபாதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இதில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்:
இன்று எமது இளைஞர், யுவதிகள் வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் கலாசார சீரழிவுக்கு உள்ளாகின்ற நிலைமை காணப்படுகின்றது. இதில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அத்தியவசியமாகும்.
கட்சியில் இணைய வரும் இளைஞர்கள் அனைவரையும் முழுமையாக உள்வாங்க வேண்டும். அதிகளவில் பெண்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத் தெரிவுகளில ஏதாவது குறைகள் காணப்பட்டால் அதனை எவரும் பகிரங்கமாக தெரிவிக்க முடியும். எதனையும் திருத்த முடியாது என்ற இல்லை. அமைப்பு விதிகளை முழுமையாகக் கடைப்பிடிதது செயலபட்டாலும்கூட அதிலும் சில சந்தர்ப்பங்களில் தவறுகள் – பிழைகள் ஏற்பட இடமுண்டு. ஒரு கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தேச வழமை சட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்த சட்டமாக காணப்பட்டது. இன்று அது கூட வழக்கொழிந்து – ஆங்கில சட்டத்தின செயற்பாடுகள – நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நாம் சமமாக இருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மற்றையவர்களை பின்தள்ளக் கூடாது.
1972 ஆம்ஆண்டு அரசியல் யாப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போது நாம் இளைஞர்களாக இருந்து அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று அவர்களுடன் கடுமையாக வாதிட்டோம். இந்த பிரதேச சபையின் தலைவராக ஜெபநேசன் இருந்தவேளையில் சபையை நடத்த விடாது குழப்பம் உண்டாக்கிய – சபை நடவடிக்கைகளை சீர்குலைத்தவாகள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளது. ஜெபநேசன் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலாகட்டும் மாகாண சபைத் தேர்தலாகட்டும் 40 வீதமான இளைஞர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
நாம் எமது கட்சிக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருந்தால் மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்களும் எமது விடுதலைப் பயணமுமே. இவற்றை நாம் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும் ஒற்றுமையைக் கட்டி வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கட்சியில் யார் பெரியவர் – சிறியவர் என்பது முக்கியம் அல்ல. கட்சி மக்களுக்கு எந்தளவுக்கு சேவையாற்ற முடியும். இன்று எமக்கு வேண்டியது எமது பொது எதிரி யார் என்பதை இனம் கண்டு அதற்கு எதிராக செயற்படுவதே ஆகும்.இதனை விடுத்து எமக்குள் குத்து வெட்டு சண்டையில் ஈடுபடுவதனால் எந்த வகையான பயனும் ஏற்படப் போவதில்லை – சாதிக்கப் போவதும் இல்லை. மாறாக பொது எதிரியே பயன் அடைவான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்களின் மனங்களையும் நாம் கிழக்கில் வெல்ல வேண்டும். அவர்களை தனித்து விட்டுவிட்டு எதனையும் செய்ய முடியும் சாதிக்கலாம் என்று எண்ணக் கூடாது – என்றார்.