எல்லை நிர்ணயம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொகுதிவாரி முறையில் நடத்துவதில் சிக்கல் உள்ளமையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
அதேவேளை, எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் 700 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதில் சு.க. தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அது மேலும் சுட்டிக்காட்டியது.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது எல்லை நிர்ணம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக அதனை குறித்த நேரத்தில் நடத்த முடியாதுள்ளது. 700 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் இது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே, நாங்கள் அனைத்தையும் ஆராய்ந்து எல்லை நிர்ணயம் செய்து தேர்தலுக்கு செல்வோமானால் நீண்ட காலம் எடுக்கும். எனினும், அடுத்த வருட நடுப்பகுதியில் தேர்தலை நடத்துவதில் அரசு தீவிரம் காட்டிவருகின்றது. ஆகவே, அடுத்தவருடத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும். எனினும், மார்ச் மாதத்தில் அது நடத்தப்படமாட்டாது” – என்றார்.