எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதனையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல்காலத்தில் பயன்படுத்தப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்கள் தொடர்பிலும் நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. அதாவது தேர்தல் காலத்தில் அபேட்சகர்கள், ஆதரவாளர்கள் பதிவு செய்யப்படாத வாகனங்கள் அல்லது கராஜ் இலக்கத் தகட்டுடன் கூடிய வாகனங்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் எனவும் இது தொடர்பில் பிடியாணை இன்றி அவர்களை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இனம், மதம், மற்றும் பிரிவினை வாத கருத்துக்களுக்கும் தேர்தல் பிரசாரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் வெறுப்புணர்வை தூண்டுவோர் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, சுவரொட்டிகள் ஒட்டுவோர் அல்லது வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் சுவரொட்டிக்குரிய வேட்பாளர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.