இந்நாட்டின் கலாசாரம், நாகரிக வளர்ச்சியைச் சீரழிக்கும் வகையில், வெளிநாட்டுப் பாடகர்களை வரவழைத்து அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உள்ளாடைகளைக் களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு, இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ‘சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு 50 ஆயிரம், 30 ஆயிரம் என நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கலந்துகொள்ளும் யுவதிகள், மதுபானத்தை அருந்திவிட்டு கடும் போதையில் தங்களது உள்ளாடைகளைக் களைந்;தெறிவது மாத்திரமன்றி, மேடைக்கு ஏறி பாடகருக்கு முத்தமும் கொடுக்கின்றனர். இவ்வாறான அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளுக்கு, இனிமேல் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது’ என்றார்