தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன்.
சர்வதேச விசாரணை ஊடாகவே போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பான அமெரிக்காவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தெளிவாக விளக்கமளித்துள்ளோம்.
உள்ளக விசாரணை என்பது மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை மூடிமறைப்பதற்கான ஒரு செயற்பாடாகும். உள்ளக விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இதனையும் மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை காலந்தாழ்த்தாது ஜெனிவாவின் 30ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வகையில் ஐ.நா. செயற்படவேண்டும் – என்றார்.