உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிர்ப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் அதிர்ப்தி வெளியிட்டுள்ளது.

r-k-kuruparan

எனினும் அமெரிக்காவின் இந்த தீர்மானம் தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என அமையத்தின் பேச்சாளர் ஆர் கே குருபரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 8 மற்றும் ஒகஸ்ட் 17 ஆம் திகதிகளில் இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை பாதுகாக்க அமெரிக்கா விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதேச்சை அதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு மாறுவதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் இல்லாத போதிலும் சீனாவின் செல்வாக்கில் இருந்து அமெரிக்க-இந்திய செல்வாக்கு ஏற்படுவதற்கு ஆட்சி மாற்றம் அவசியமானது என குருபரன் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் விடயங்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகளிடம் இருந்து இந்த ஆட்சி மாற்றத்திற்கு ஆபத்து வரலாம் என்பதை அமெரிக்காவும் இந்தியாவும் அறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தமது நிழச்சி நிரலுக்கு அமைய விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளுமாறும் அனுசரித்து செயற்படுமாறும் ஒத்துழைக்குமாறும் தமிழ் தரப்பு மீது அழுத்தங்களை அவர்கள் பிரயோகிப்பதாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆணையை வழங்கியிருந்தும் கூட தமிழ் மக்களுக்கு எதிராகவே அவர்கள் செயற்படுவதாக குருபரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Related Posts