உள்நாட்டில் பேசிப் பயனில்லல் அதனால்தான் சர்வதேசத்தை நாடுகிறோம்! – முதலமைச்சர் சி.வி

“உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்” – இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

vicky0vickneswaran

இந்த கூட்டத்தில் இணைத்தலைமை வகித்து உரையாற்றும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-

சட்டத்துக்குப் புறம்பான பல நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு, அரச வளங்களைப் பெருவாரியாகப் பாவித்து, ஆளுநரைத் தமது தேர்தல் கூட்டங்களில் தம் சார்பாகப் பேச வைத்து, இராணுவப் பயமுறுத்தல்களை ஏற்படுத்தி அவற்றின் மத்தியில்த் தான் வடமாகாண சபைத் தேர்தல் சென்ற செப்ரெம்பர் மாதம் நடத்தப்பட்டது.

அப்படியிருந்தும் 38 பிரதிநிதிகளில் எம்மவர்கள் 30 பேர் மிகப் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மஹிந்த சிந்தனை உள்ளடங்கிய அரசாங்கக் கொள்கைகளை எமது மக்கள் நிராகரித்து எமது கூட்டமைப்பின் கொள்கைகளையே வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் எழத்தேவையில்லை.

ஆனால் தேர்தலின் பின்னர் ஒரு சில வாரங்களினுள் மாகாண மக்கள் நலன் கருதாது, ஆளும் கட்சி நலன் கருதியும் தனிப்பட்ட அமைச்சர்கள் நலன் கருதியும் நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவது எம்மால் புரிந்து கொள்ளப்பட்டது.

மத்திய அரசாங்க ஆளும் கட்சி தாம் தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீரவேண்டும் என்ற பாணியில்தான் இங்கு நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவதை அவதானித்தோம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இணைத் தலைவராக தலைமை தாங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களால் அவரின் 18.11.2013 ஆம் திகதி கொண்ட கடிதத்தால் நான் கேட்கப்பட்டிருந்தேன்.

அக் கடிதத்தின் படி வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்தவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை அதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில் இணைத் தலைவராக வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தேன்.

மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எதுவும் எமக்கில்லை. அச் சிந்தனையை முன் வைத்த கட்சிகளைத்தான் நாங்கள் தேர்தலில் முறியடித்திருந்தோம். எம்மைப் பொறுத்த வரையில் எமது மக்களுக்கு ஏற்ற புதிய சிந்தனைகளையே நாம் உருவாக்க வேண்டிய ஒரு கடப்பாடு எம் எல்லோரையும் சார்ந்துள்ளது என்பதை நாம் மறத்தலாகாது.

அப்படியிருந்துங் கூட அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதியைச் சென்று சந்தித்தேன். பல உறுதிப்பாடுகளை அவர் அத்தருணத்தில் தந்திருப்பினும் எதனையும் அவர் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதியாமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தி வருகின்றன.

இங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இருவற்றிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால்தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்குந் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அவ்வந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன்.

எதேச்சையாக அரசாங்கமும் அரசாங்க அமைச்சர்களும் நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர். இது ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

தொடர்ந்தும் எம்மக்கள் எதேச்சாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்க வேண்டும் என்று எண்ணுவது மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல் மடமையுமாகும். எமது மாகாண மக்கள் மற்றைய மாகாண மக்கள் போலல்லர். அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானவையும் தனித்துவமானவையுமாகும். எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்றும் கூறி வைக்கின்றேன்.

எல்லா மாகாணங்களையும் ஒரேவாறாக நடத்துவோம், ஒரேவாறான நிதிகளையே வழங்குவோம் என்று அரசாங்கம் கூறுவது கேலிக்கிடமாக அமைகின்றது. கிழக்கையும் எங்களையும் விட வேறெந்த மாகாண மக்கள் போரின் உக்கிரத்திற்கு கிட்டேயிருந்து தொடர்ந்து முகங்கொடுத்து வந்துள்ளார்கள்? வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை நாடு முழுவதும் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் தற்பொழுது முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கு ‘திவிநெகும’ சட்டம் ஓர் உதாரணம். மாகாண சபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கை வைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது. மத்திக்குக் கட்டுப்பட்டே மாகாணம் இயங்க வேண்டும் என்பதே மத்தியில் உள்ளோரின் மனோ நிலை. ஆனால் மத்தியில் உள்ளோர் மாகாணத் தேவைகளைப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்பது மலைக்க வைக்கும் ஒரு கேள்வியாக பரிணமித்துள்ளது.

எனினும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டை இவ்வாறான மத்தியில் உள்ளோரின் எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே நாங்கள் காண்கின்றோம். மத்திய அரசாங்கத்தின் கை மாகாண சபையின் நடவடிக்கைகளில் மேலோங்கும் வண்ணமாகவே ஜனாதிபதி செயலணி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

ஜனாதிபதி செயலணியை வாபஸ் பெற்ற பின்னர் கூட மத்தியின் கையை ஓங்குவிக்க சதிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் இணைத் தலைமையில் கருமம் ஆற்றும் போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மட்டும் எவ்வாறு தனித்தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன என்ற கேள்விக்கு இது வரையில் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. அண்மையில் எமது இணைத்தலைவர் கௌரவ அமைச்சர் அவர்கள் வவுனியாவில், ஒட்டுசுட்டானில் எங்கெங்கே கூட்டம் நடத்தினார், என்ன செய்தார் என்பதெல்லாம் எமக்கு உடனுக்குடனேயே இணையத்தளத்தில் தந்துதவப் பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை சீரழிக்கும் வண்ணமாகவே இப்பேர்ப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன. மத்தி மகுடி ஊதுவதால் “கருடா! சௌக்கியமா?” என்ற குரல் எமக்கு அவர்களிடம் இருந்து கேட்கின்றது. மத்திக்கும் மலைப்புக்கள் வந்து கொண்டிருப்பதை நாங்கள் மறக்கக்கூடாது. விழுந்திருப்பவன் எந்த நாளும் விழுந்திருப்பான் என்று எதிர் பார்ப்பது மடமையாகும். நடப்பவற்றை அவதானித்துத்தான் மாகாண ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நாங்கள் முன்னர் பங்குபற்றாது இருந்து வந்தோம். எனினும் எமது மக்களின் ஆக்ஞையை நாம் புறக்கணிக்கக் கூடாது. இதனால் எமது முடிவை மாற்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்ற முன்வந்துள்ளோம். எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே எம் மக்களின் எதிர் பார்ப்புக்களை வீணடிக்க விடாது நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

எனினும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின் நிற்க மாட்டோம். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம். எனது சிற்றுரையை முடிக்க முன் எம்மை நோக்கி அண்மைக் காலங்களில் விடுக்கப்பட்டுள்ள ஓரிரு கேள்விகளுக்கு, விமர்சனங்களுக்கு இத் தருணத்தில் பதில் இறுப்பது உசிதம் என்று நம்புகின்றேன்.

முதலாவது எம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டு போகக் கூடாது. நாமே பேசித் தீர்க்க வேண்டும் என்ற அரச தரப்புக் கோரிக்கை. ஏற்கனவே இது பற்றிப் பல இடங்களில் நாம் பேசியுள்ளோம். இத் தருணத்தில் அது பற்றி சற்று விரிவாகக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். தேர்தல் காலங்களில் நாங்கள் ஒரு விடயத்தை எமது தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டோம். அதாவது நாம் சட்டத்திற்கு உட்பட்டே எமது உரிமைகளைப் பெற உத்தேசித்துள்ளோம். அரசாங்கம் பற்றி – அதன் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி எந்த வித முன் தீர்மானங்களையும் மனதில் கொள்ளாது முதலில் எமது குறைகளை எமது அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்ல உத்தேசித்துள்ளோம். எமது நல்லெண்ணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். அவர்கள் எம்முடன் சேர்ந்து எமக்கு அனுசரணையாக நடந்து கொண்டார்களானால் புதிய ஒரு உறவு முறையை நாங்கள் உருவாக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தோம்.

ஆனால் எம்மைப் புறக்கணிக்க – எமது ஆதங்கங்களைப் புறக்கணிக்க – அரசாங்கம் தீர்மானித்தால் வெளி நாடுகளுக்கு எமது குறைகளை எடுத்துச் செல்வதை விட எமக்கு வேறு வழியிருக்காது என்றும் சொல்லி வைத்திருந்தோம். உலகமானது இன்று சுருங்கி வந்து பூகோளக் கிராமமாகப் பரிணமித்துள்ளதை எமது பேச்சுக்களில் எடுத்துக் காட்டினோம். பெருவாரியான எம்மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்தும் அதே மக்களின் ஆத்திரம் என் மீது படர என் தேர்தல் காலச் சொற்களுக்கு உயிரூட்டும் விதத்தில் நான் ஜனாதிபதி முன் சென்று என் உறுதி மொழியை எடுத்துக் கொண்டேன். “வேண்டியதைக் கேளுங்கள் தருவோம்” என்றார்கள். நாம் கேட்டோம். சட்டப்படி பிரதம செயலாளர் முதலமைச்சரின் கருத்தொருமிப்புடன் நியமிக்கப்பட வேண்டும். எனவே எம் இரு தரப்பாருக்கும் ஏற்புடைத்தான ஒருவரை பிரதம செயலாளராக நியமிக்கக் கோரினேன். “சரி” என்றார் ஜனாதிபதி. இது வரையில் நியமிக்கவில்லை.

அடுத்து இராணுவப் பின்புலமற்ற ஒருவரை ஆளுநர் ஆக்குங்கள் என்றோம். “சரி” என்றார் ஜனாதிபதி. ஆனால் முன்னிருந்த இராணுவ பின்புலம் உள்ள ஆளுநருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார் ஜனாதிபதி. எமது பாதிப்படைந்த மக்களுக்கு மறு வாழ்வு கொடுக்க வேண்டிய ஜனாதிபதி இராணுவப் பின்புலமுடைய ஆளுநருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். ஆகவே எமது கோரிக்கைகளைப் புறக்கணித்து மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதிலேயே அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றது.

ஐயாயிரத்து எண்ணூற்றி முப்பத்தியொரு மில்லியன் ரூபாவை வடமாகாண விருத்திக்கு நாம் ஒதுக்கியுள்ளோம் என்று கூறி விட்டு ஆயிரத்து எண்ணூற்றி எழுபத்தி ஆறு மில்லியன் ரூபாவை மட்டும் எமக்குத் தந்து விட்டு மூவாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தி ஐந்து மில்லியன் ரூபாவைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அத் தொகையின் செலவு பற்றி எமக்குத் தெரிவிக்காமலே தமக்கேற்றவாறு செலவு செய்ய முற்பட்டுள்ளது அரசு. மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பைப் பெறாமல் தான்தோன்றித்தனமாக அவற்றைச் செலவு செய்ய அரசு முற்படுகின்றது.

எமது மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் யதார்த்தத்திற்குப் புறம்பான முறையில் ஊடகங்களுக்குச் செய்திகளை விடுக்கின்றார். 5831 மில்லியன் ரூபாவில் 1876 மில்லிய்ன் ரூபாவை மட்டுமே வடமாகாணசபை செலவிட்டுள்ளது 3955 மில்லியன் ரூபாவைக் கையில் வைத்துக் கொண்டு பணம் போதாது என்று கூறுகின்றார்கள் என்று அவர் கூறினர் என. ‘தெரண’ தொலைக்காட்சி சிங்கள மொழியில் நேற்று ஒளிபரப்பியதை நான் கண்டு கேட்டேன்.

இது உண்மைக்குப் புறம்பானது. எமக்குக் கிடைத்திருக்கும் மொத்தத் தொகையே 1876 மில்லியன் ரூபா மட்டுமே. மிகுதி 3955 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வைத்திருந்து ஏப்பம் விடுகின்றது. தன்னால் அந்த செலவிடப்படாத தொகையைச் செலவிட முடியும் என்றிருக்கின்றார் அவர். அவரைப் போன்று நாமும் அண்டி வாழ ஆசைப்பட்டால் கட்டாயம் அவர் கூறுவது போல் எம்மாலும் முடியும். நாம் எமது தனித்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படாமல் நடக்கவே விரும்புகின்றோம். இவை யாவும் அரசாங்கம் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதங்கங்களை, அபிலாஷைகளை, ஆசைகளை, எதிர்பார்ப்புக்களை அடியோடு சாய்த்துத் தமது கரவான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மெருகூட்ட விழைவதை எடுத்துக் காட்டுகின்றன. இதற்கு எம்மவர்களில் சிலர் ஒத்தூதுவது வருத்தத்தைத் தருகின்றது. எனவே தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் சர்வதேச நாடுகளுடன் எமது பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன். நாம் வெளி நாடுகளுடன் பேச விழைவது உள்நாட்டில் எமது குரலுக்கு மதிப்பில்லை என்ற காரணத்தினாலே தான் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக எம்முடன் சேர்ந்து செயற்படுங்கள் என்ற அரச கோஷம். அதன் தாற்பரியத்தை நாங்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கணவனும் மனைவியும் தம் குழந்தைகளைப் பற்றித் தாங்கள் இருவரும் சேர்ந்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்று தீர்மானம் எடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளை எந்தப் பாடசாலையில் சேர்ப்பது, எப்பேர்ப்பட்ட கல்வியைப் பெற்றுக் கொடுப்பது, யாருடன் சேர விடுவது, என்ன விதமான அனுசரணைகளை அவர்களுக்கு ஈவது போன்ற பலதையுங் கணவன் மட்டுமே தீர்மானித்துச் செய்து கொண்டு, வாய்பொத்திக் கை கட்டி நிற்கும் மனைவி தன்னுடன் சேர்கின்றார் இல்லை என்றால் அதன் அர்த்தம் என்ன? தீர்மானம் எடுக்கும் உரித்தை மனைவிக்கு வழங்கக் கணவனுக்கு இஷ்டம் இல்லை என்பதே அதன் அர்த்தம். அதே போன்று “சேர்ந்து செய்வோம்” என்று அரசாங்கம் அறை கூவல் விடுப்பதன் தாற்பரியத்தை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது நாங்கள் நினைத்ததைச் செய்வோம். உங்களுடன் கலந்தாலோசிக்காமல் செய்வோம். நீங்கள் அதற்கு “ஆமாம்” சொல்ல வேண்டும். அப்பொழுது தான் அது சேர்ந்து செய்வதாகும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை. எம்முடன் எந்தவித கலந்தாலோசனைகளையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக அரச அலுவலர்களைத் தம் பக்கம் சார வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கூட்டங்களைத் தாமே கூட்டிவிட்டு கடைசி நேரத்தில் எமக்கு அழைப்பு விடுகின்றார்கள். வந்திருந்து தேநீர் அருந்திவிட்டுக் கைகொடுத்து விட்டுச் சென்றால் அது சேர்ந்து செயற்படுவது என்ற ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

வடமாகாணசபையானது வட மாகாண மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபை. அம்மாகாணத்தின் தேவைப்பாடுகளை அம்மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே அறிவர். எனவே அவர்களிடம் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையுங் கொடுத்து விட்டு அரசாங்கம் எமக்கு எம் கடமைகளைச் செய்ய உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் அதுவன்று இன்று நடப்பது. அரசாங்கம் வடமாகாண மக்களுக்கு எது தேவை என்று இதுவரை காலமும் தாம் நினைத்ததைத் தான் கொடுத்து வந்துள்ளது. அந்தக் கலாசாரம் மாறினால்தான் நாம் சேர்ந்து செயற்பட முடியும். எமது மக்கள் தமக்குள் தாமே எது வேண்டும் என்று சிந்திப்பதை, எடுத்தியம்புவதைத் தடுக்கவே எமது உரித்துக்களைப் பறிக்கும் விதத்தில் ‘திவிநகும’ போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பறிப்பதைப் பறித்துக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாக இயங்கிக் கொண்டு எம்முடன் வடமாகாண சபையினர் சேர்ந்து நடக்கின்றார்கள் இல்லை என்று ஊர் உலகத்திற்குப் பறைசாற்றினால் அதன் உள்ளர்த்தம் என்ன? மத்திய அரசாங்கம் தான் நினைத்ததைச் செய்யும். மாகாணம் கைகட்டி வாய் புதைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்பது தான் மத்திய அரசாங்கத்தின் இணங்கிச் செயற்படுவது பற்றிய புதிய வியாக்கியானம்.

பத்திரிகை ஒன்றில் தலையங்கம் பார்த்தேன். எந்தளவுக்கு அது அந்த அமைச்சரின் கருத்தோ தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கான தீர்வை ஜனாதிபதியே தர வேண்டும். சர்வதேசத்தால் எதுவுமே முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தலையங்கத்தில். இதன் உள்ளர்த்தத்தையும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வானது இரு தரப்பாரும் பேசித் தீர்மானிக்க வேண்டிய ஒரு விடயம். அதை எவ்வாறு ஜனாதிபதி தர முடியும்? அவ்வாறு அவரால் தர முடியும் என்றால் எம்மிடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள்? “வந்து விழுங்கள். என் கால்களில்! நான் நினைத்தால் உங்களுக்கொரு தீர்வு தருவேன்” என்பது தானா அதன் அர்த்தம்.

இப்பேர்ப்பட்ட மத்திய அரசாங்கச் சிந்தனைப் பின்னணியே இன்று வரை எமது தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற முடியாது செய்துள்ளது. இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமும் தேசியப் பிரச்சினைக்கு எமது தீர்வு இதுவே என்று வெளிப்படையாகக் கூற முன்வரவில்லை. தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே, ஏன் வீணாகப் பிதற்றுகின்றார்கள் என்று தான் கூறியுள்ளார்கள். எனவே எமது சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். தமிழ்ப்பேசும் மக்களின் குறைகளைக் களைய முடியும். – என்றார்.

Related Posts