உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த செயலணி!

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைக்கு முன்வைத்த தகவல்கள் குறித்தும் அமைச்சரவை தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து மோதல்கள் காரணமாக உள்நாட்டில் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல் முடிவடைந்த நிலையில் அவர்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். ஆயினும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக நிறைவேற்றப்படவில்லை. எனவே அவ்வகையில் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து குடியேற்றத்துக்காக காத்திருக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு 16,120 வீடுகள் தேவைப்படுகின்றன. அதேபோன்று சிங்கள குடும்பங்களுக்காக 5,543 வீடுகள் தெவைப்படுகின்றன. எனவே மொத்தமாக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன.

அவ்வகையில் அமைக்கப்படவுள்ள இச்செயலணியானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதுதீன், மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரின் இணைத்தலைமையில் மற்றும் குறித்த மாகாணங்களின் பிரதானிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரினை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts