வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் உணவு வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வெளிப்படையான முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் வகையிலேயே இந்தத் தீர்மானம் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தில், வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் உணவு வழங்குவதற்கான கேள்வி கோரலின்போது மோசடி இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகின்றது.
அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்குச் சுட்டிக்காட்டிய போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்தகாரருக்கே மீளவும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாணசபை கைப்பற்றப்படுவதற்கு முன்னர் ஒப்பந்தம் கோரல் இடம்பெற்றிருந்தாலும், அதன் பின்னர் நடந்தேறிய மோசடிகள் தொடர்பில் ஆதாரத்துடன் சுகாதார அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தார். எனினும் போதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வில், திட்டமிட்ட வகையில் நடந்தேறியுள்ள மிகப்பெரிய மோசடி தொடர்பாக வெளிப்படைத் தன்மையான முழமையான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன் சமர்ப்பித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி