உலக வங்கிக் குழுவினர் சபாபதி நலன்புரி நிலையத்திற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர்.

world-bank-visit-sabapathy-mukam

நேற்றைய தினம் காலை 11.00 சபாபதி நலன்புரி நிலையத்திற்குச் சென்ற உலக வங்கிக் குழு அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம், உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

இக்குழுவினர் மக்களைச் சந்தித்தபோது, தங்களை தங்கள் சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு அம்மக்கள் இக்குழுவினரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததுடன், பருவமழை ஆரம்பிக்கும் நிலையில் நிவாரணம், மற்றும் மழை வெள்ளத்தினால் வருடாந்தம் உண்டாக்கப்படும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் எனவும் மக்கள் கேட்டுள்ளனர்.

மேலும், தாம் 27 வருடங்களாக நலன்புரி முகாமில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்வதாகவும், ஒரு சிறிய கொட்டிலிலேயே கணவன், மனைவி, பிள்ளைகள், மருமக்கள் என அனைவரும் ஒன்றாக வாழும் சீர்கெட்ட வாழ்க்கை நடாத்துவதாகவும் அம்மக்கள் கண்ணீருடன் தமது துன்பத்தை வெளியிட்டனர்.

தம்மைச் சொந்த இடத்தில் குடியமர்த்த அரசாங்கத்திடம் அக்குழுவினரைக் கோருமாறும் மன்றாட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த உலக வங்கியின் தெற்காசியாவுக்கான தலைவர் அனற்மாரி டில்ஷன்,

நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் குடியேற்றப்பட்டதன்பின்னர் உங்களுக்கான சகல உதவிகளையும் உலக வங்கி வழங்கும் என உறுதியளித்தார்.

Related Posts