உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் யாழ். மாணவன் பங்கேற்பு

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இலங்கை பல்கலைக்கழக வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட மாணவன் எம்.என்.சித்திக் உள்ளடங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி அலகு பணிப்பாளர் கே.கணேசநாதன் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார்.

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை (05) தொடக்கம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் குழாம் தாய்லாந்து சென்றுள்ளது.

இதில், பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுவதற்காக சித்திக், இலங்கை பல்கலைக்கழகங்களின் குழாமில் இடம்பெற்றுள்ளார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில், 105 கிலோ எடைப்பிரிவில் சித்திக் முதலிடத்தை பெற்றமையடுத்தே, இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து உலக பல்கலைக்கழங்களுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லும் முதல் வீரன் சித்திக் என்பதுடன், அவரது பயிற்றுநராக எம்.இளம்பிறையன் கடமையாற்றுகின்றார்.

கடந்த வருடம் ரஸ்ஸியாவில் இடம்பெற்ற உலக பல்கலைகழகங்களுக்கிடையிலான போட்டியின் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஏ.ஜெயரூபன் சென்று பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts