உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு நிராகரிப்பு

உலக தற்கொலை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி இந்த வருடத்தின் உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக ‘தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம், ஒருவருடன் ஒருவர் தொடர்புபட்ட உலகம்” காணப்படுகின்றது.

மனநோய்களும் மன அழுத்தங்களுமே தற்கொலைக்கான அடிப்படை காரணங்களாக அமைகின்றன.
இந்தநிலையில், தற்கொலை தவிர்ப்பிற்காக மானசீக சிகிச்சைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும், மானசீக நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோர் வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட அறிக்கையில் உலகில் அதிக தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் காணப்படுகின்றது.

இலங்கையின் சனத்தொகையில் ஒவ்வொறு ஒரு லட்சம் பேரில், 28 தசம் 8 வீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இலங்கையில் தற்கொலை செய்து கொண்டவர்களில் எண்ணிக்கை 3 ஆயிரத்து 770 ஆக காணப்பட்டது.

இந்த எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 461 ஆக குறைவடைந்தது.
இதன்படி இலங்கையில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts