20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வெளியேற்றி வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்கிறது.
5 அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேச அணிகள் மோதின.
மனைவிக்கு குழந்தை பிறந்ததால் சில ஆட்டங்களில் ஆடாத வங்காளதேச நட்சத்திர வீரர் தமிம் இக்பால் அணிக்கு திரும்பினார். இதனால் நுருல் ஹசன் நீக்கப்பட்டார். இதே போல் காயத்தில் சிக்கிய முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு பதிலாக அராபத் சன்னி சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது நவாசுக்கு பதிலாக அன்வர் அலி இடம் பிடித்தார்.
டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட்டிங்கை தொடங்கியது. சாதகமான ஆடுகள சூழலை பயன்படுத்தி வங்காளதேச பவுலர்கள் பாகிஸ்தானை திணறடித்தனர். குர்ரம் மன்சூர் (1 ரன்), ஷர்ஜீல் கான் (10 ரன்), முகமது ஹபீஸ் (2 ரன்), உமர் அக்மல் (4 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்க முடியாமல் நடையை கட்டினர். முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 34 ரன்களுடன் தத்தளித்தது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தானின் மோசமான ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடக்க 10 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்ததே குறைவானதாக இருந்தது.
இருப்பினும் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவும், சோயிப் மாலிக்கும் இணைந்து பாகிஸ்தான் அணியின் மானத்தை காப்பாற்றினர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்தனர். சோயிப் மாலிக் 41 ரன்களில் (30 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். இறுதி கட்டத்தில் பாகிஸ்தான் சற்று வேகம் காட்டியதால் ஓரளவு நல்ல ஸ்கோரை அடைந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. சர்ப்ராஸ் அகமது 58 ரன்களுடன் (42 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். கேப்டன் அப்ரிடி ரன் ஏதுமின்றியும், அன்வர் அலி 13 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கடைசி 6 ஓவர்களில் மட்டும் அந்த அணி வீரர்கள் 64 ரன்கள் திரட்டினர்.
வங்காளதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். வங்காளதேசம் தரப்பில் அல்-அமின் ஹூசைன் 3 விக்கெட்டுகளும், அராபத் சன்னி 2 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது, மோர்தசா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 130 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசத்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. தமிம் இக்பால் 7 ரன்னிலும், சபிர் ரகுமான் 14 ரன்னிலும், சவும்யா சர்கர் 48 ரன்னிலும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்), முஷ்பிகுர் ரம் 12 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் 8 ரன்னிலும் வெளியேறினர்.
கடைசி 2 ஓவர்களில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி வீசினார். இந்த ஓவரில் அவர் 2 ‘நோ-பால்’ வீச ஆட்டம் வங்காளதேசம் பக்கம் திரும்பியது. அந்த ‘நோ-பால்’கள் வழியாக பவுண்டரி உள்பட 8 ரன்கள் வங்காளதேசத்துக்கு கிடைத்தது.
அந்த ஓவரில் மொத்தம் 15 ரன்களை முகமது சமி விட்டுக்கொடுக்க பாகிஸ்தானின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. இதையடுத்து கடைசி ஓவரில் 3 ரன் தேவைப்பட்ட போது மக்முதுல்லா பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். வங்காளதேச அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. மக்முதுல்லா (22 ரன்), கேப்டன் மோர்தசா(12 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதன் மூலம் 3-வது வெற்றியுடன் வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்தையும் வீழ்த்தி இருந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, வங்காளதேசம் சாய்ப்பது இது 2-வது முறையாகும்.
வங்காளதேசத்தின் வெற்றியால் பாகிஸ்தான் மற்றும் உலக சாம்பியன் இலங்கையின் இறுதிசுற்று வாய்ப்பு பறிபோனது. வருகிற 6-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, இந்தியாவுடன் மோத இருக்கிறது.