11வது உலக கோப்பை தொடர் நேற்றுடன் இனிதே நிறைவுபெற்றது. ஆஸ்திரேலியா, 5வது முறையாக சாம்பியனாகிவிட்டது.
இந்த உலக கோப்பையில் பரிசு தொகை மதிப்பு மொத்தம் 71 கோடியாகும். 2011 உலக கோப்பை பரிசு தொகையைவிட 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இதில், சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 3,975,000 பரிசு தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் இது சுமார், 24.6 கோடியாகும்.
பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு ரூ. 10.8 கோடி, பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
தொடர் நாயகன் விருதை மிட்சேல் ஸ்டார்க் பெற்றார். 8 போட்டிகளில் அவர் 22 விக்கெட்டுகளை சாய்த்தார். பவுலிங் சராசரி 10.18 மட்டுமே. 28 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது பெஸ்ட்.
பைனலில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து, முக்கிய நேரத்தில் ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கம் கொண்டுவந்த ஜேம்ஸ் பால்க்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த தொடரில் ஸ்டார்க் மற்றும் டிரெண்ட் பவுல்ட் தலா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.
உலக கோப்பையில் அதிக ரன் விளாசியவர் நியூசிலாந்தின் மார்டின் கப்தில். மொத்தம் 547 ரன்கள். அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.
உலக கோப்பையில் மொத்தம், 38 சதங்களும், 2 இரட்டை சதங்களும் விளாசப்பட்டன. 400க்கும் மேல் ஒரு அணி ஸ்கோர் செய்வது 3 முறை நடந்தது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மார்டின் கப்தில் எடுத்த 237 ரன்தான், ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னாக அமைந்தது. அதேநேரம், லீக் போட்டியில், 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.
மொத்தம் 26 சிக்சர்களுடன், கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், 59 பவுண்டரிகளுடன் கப்தில் முதலிடத்திலுமுள்ளனர். 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை சாய்த்தார் நியூசிலாந்தின் டிம் சவுத்தி.
இலங்கையின் குமார் சங்ககாராவின் அவரேஜ் ரன் குவிப்பு 108.20 ஆக இருந்தது. அதிகப்படியாக சதம் அடித்த வீரரும் சங்ககாரா. நான்கு சதங்கள் விளாசினார்.
ஸ்டீவ் ஸ்மித் 4 அரை சதங்களுடன் முன்னணியில் இருந்தார். டிரென்ட் பவுல்ட் அதிகபட்சமாக 14 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். சராசரிாயக 10.18 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தி வந்த ஸ்டார்க் சிறந்த பவுலராகும்.