விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்நாடு தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என்று மற்ற மாநிலங்களிலும் ‘தெறி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் கூட விஜய், நைனிகாவின் நடிப்பு படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.
அமெரிக்காவில் 282 திரையரங்குகளில் வெளியான ‘தெறி’ சுமார் 6 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. யூகேவில் 2.5 கோடிகளையும், ஆஸ்திரேலியாவில் 1.5 கோடிகளையும் இப்படம் குவித்துள்ளது. இதனால் முதல் 4 நாட்களில் இப்படம் ரூ 45 கோடிகள் வரை வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும் உலகளவில் அதிகம் வசூலைக் குவித்த தென்னிந்தியப் படங்களில் விஜய்யின் ‘தெறி’ 7 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. முதல் 6 இடங்களை ‘பாகுபலி’, ‘சர்தார் கப்பர் சிங்’, ‘லிங்கா’, ‘எந்திரன்’, ‘ஐ’, ‘ஸ்ரீமந்துடு’ ஆகிய படங்கள் தக்க வைத்துள்ளன. இதன் மூலம் உலகளாவிய வசூலில் ரஜினி, விக்ரமுக்கு அடுத்த இடத்தை விஜய் கைப்பற்றியிருக்கிறார்.
ஷாரூக்கானின் ‘பேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ போன்ற படங்களால் கூட தெறியின் வசூலைத் தடை செய்ய முடியவில்லை.
இதுதவிர ஆஸ்திரேலியாவில் ஷாரூக்கானின் ‘பேன்’ படத்தை விஜய்யின் ‘தெறி’ முந்தியுள்ளது. இதனால் மகிழ்ந்து போன விஜய் ‘சக்சஸ் மீட்’ வைத்து இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி இருக்கிறார்.