உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ள உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விளையாட்டு விஞ்ஞான கல்லூரி, பிரிட்டன் விளையாட்டு விஞ்ஞான கல்லூரி மற்றும் இராணுவ உடற்பயிற்சி முறையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 108 உடற்பயிற்சி வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த உடற் பயிற்சி வகைகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்தைச் சுற்றுதல், இடுப்பை வளைத்து கால் விரல்களை தொடுதல், முழங்காலை சுற்றுதல் உள்ளிட்ட 108 வகை உடற் பயிற்சிகள் தற்போது பாவனையில் இல்லை.
இந்த உடற் பயிற்சிகளினால் முதுகெலும்பிற்கும் நரம்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும் இந்த ஆபத்து மிகு உடற் பயிற்சி முறைகள் இலங்கை பாடசாலைகளில் பரவலாக காணக்கூடியதாக அமைந்துள்ளது.
இந்த ஆபத்தான உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதனால் பாடசாலை மாணவர்கள் உபாதைகளை எதிர்நோக்க நேரிடும் என மருத்துவர் அசாங்க விஜேரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.