உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமானதொரு இணையத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணையச் சேவைகள் மீது இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.
பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணையக் கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது.
பிரிட்டனின் முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்தத் தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் ransomware attack என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இணையச் சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று இந்த மென்பொருள் கேட்கும்.
பிரிட்டனின் சில மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இணையக் கட்டமைப்பு முழுமையாகச் செயலிழந்துபோனதால் பல இடங்களில் நோயாளிகள் அவசரக்கால சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
ஸ்பெய்ன் நாட்டில் பெருமளவிலான அந்நாட்டு நிறுவனங்களின் இணையக் கட்டமைப்பும் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது