உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள்!! சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன்

“உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். வழிபாடுதான் இன்று அனைவருக்கும் மன வலிமைதரும். மருத்துவ உலகின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து , அனைவரும் நோய் பரவாது காக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்”

இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும்,தெல்லிப்பழைஶ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

“சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள். சைவக் கோவில்களை சிலர் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். இது மிகவும் மனவருத்தத்துக்குரியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

திருக்கோவில்களை விமர்சிப்பதைத் தவிருங்கள். சில பிறமதத்தவர்கள் புனை பெயர்களில் சைவக் கோவில்களை இத்தருணத்தில் விமர்சித்து மக்களை குழப்பமடையச் செய்வதாக பலர் முறையிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பாக சைவ மக்கள் கவலைப்பட வேண்டாம்.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க எனப் பதில் கூறுதல்தான் எங்கள் மரபு. வீண் விமர்சனங்களை யாரும் வளர்க்காதீர்கள். உங்களால் செய்யக்கூடிய உதவிகளை உங்கள் வசதி போல் செய்யுங்கள்.

தர்மகாரியங்களை அமைதியாகச் செய்யுங்கள். திருக்கோவில்களில் நித்திய பூசைத் தவிர ஏனைய சிறப்பு வைபவங்களைச் செய்வதைத்தவிருங்கள்.

மனதில் எங்கள் தலங்களை நினைந்து வழிபாடு செய்யுங்கள். எவரையும் குறை கூறுவதைத் விடுத்து எல்லோருக்காகவும் மன்றாடுங்கள்.

தம் உயிரைப் பொருட்படுத்தாது ஆபத்தான காலத்தில் பணியாற்றும் அனைவரையும் நன்றி சொல்லி அவர்களின் சேவைக்காகவும் பிரார்த்தியுங்கள்.

சைவமக்களே உங்கள் மனத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் நல்லதையே நனவிலும் கனவிலும் காத்துக்கொள்ளுங்கள்.

இமைப் பொழுதும் இறையருளே துணை – என்றுள்ளது.

Related Posts