உலகத் தலைவர்கள் வரிசையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் வேலைத் திட்டத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்கு முன்னர், பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிட முடியும் என்றும் கூறியுள்ளார்.
அந்தவகையில் வடமாகாண முதலமைச்சர் உள்ளதாகவும் 30 வருட கால யுத்தத்தின் பின்னர், வடமாகாணத்தில் தேசிய கல்வி நிகழ்வுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனிவரும் காலங்களில் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ள தேசிய நிகழ்வுகள், இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தை பொறுத்த வரை முதற்கட்டமாக 644 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், அதற்காக 4130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 97 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 129 பாடசாலைகளும், யாழ். மாவட்டத்தில் 279 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்கள மொழி மூலமாக முதற்கட்டமாக 7000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
கொழும்பிலுள்ள பாடசாலைகள் பெறும் அதே வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலைகயில் குறைபாடுகள் நிலவுமாக இருந்தால் மாணவர்களுக்கு கல்வியை சரியாக கற்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது எனவும் வடமாகாண கல்வி அமைச்சிலுள்ள தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் குறித்தும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நியமனம் மிக விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் நியமனங்களின் பின்னர், வட மாகாணம் கல்வித் துறையில் வேகமாக முன்னேற்றமடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.