உலகத் தமிழர்களை ஒன்றுபடுமாறு வடக்கு முதலமைச்சர் அழைப்பு!

உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம் தற்போது உருவாகிக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் சொறஸ்ரிறியன் மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் நிகழ்த்திய முழு உரையும் வருமாறு,

தலைவரவர்களே, பிரித்தானியா வாழ் எனதருமை சகோதர சகோதரிகளே, இங்கு வந்து நான் உங்களுடன் கடைசியாக அளவளாவிய காலத்தில் இருந்து 15 மாதங்களுள் பல நிகழ்வுகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்தேறி மத்தியில் இரு கட்சிகள் ஒரு அரசாங்கத்தை நடாத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை இலங்கை சம்பந்தமாக உடன்பாட்டுத் தீர்மானம் ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ளது. அமெரிக்க உயரதிகாரிகள் சமந்தா பவர் மற்றும் மலினொவ்ஸ்கி போன்ற பலர் வடக்கு நோக்கி வந்து எம்மைச் சந்தித்து அளவளாவிச் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அதிஉயர் பாங் கி மூன் அவர்கள் வடக்கு வந்து எம்மைச் சந்தித்துச் சென்றுள்ளார். எமது புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக முன்மொழிவுகளை எமது வடமாகாணசபை அரசாங்கம் முன்வைத்துள்ளது. தமிழ் மக்கட் பேரவை என்ற பொது மக்கட் குழுவினர் தமிழ் பேசும் மக்களின் கரிசனைகளையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படையாகக் கொண்டுவரும் விதத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சென்ற மாதம் மாபெரும் மக்கட் பேரணி ஒன்றை நடாத்தி நின்றனர். அதில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் பலவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அந்த விதத்தில் தமிழ் மக்களின் ஒன்று பட்ட கருத்துக்கள் தற்போது வெளிவருவனவாக இருக்கின்றன.

உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தனித்த பகைமைகளைத் தாண்டி ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. சுனாமியின் போது விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதில் பகைமை மறந்து ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஒரு சில நாட்களில் “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

உலகளாவிய தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நாடுகளால், கட்சிகளால், கருத்துக்களால் நாம் வேறுபட்டிருந்தாலும் தமிழ் மொழி, தமிழர் பாரம்பரியங்கள் என்பன எம்மை ஒன்று சேர்க்குந் தன்மையனவாய் அமைய வேண்டும். அமைந்துள்ளன என்றால் அது மிகையாகாது.

இதிலே மூன்று கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். ஒன்று செம்மொழியாம் தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் பண்பாடும். பலகாலச் சரித்திரமும் எம்மை அடிப்டையில் ஒரு சிறந்த பாரம்பரியத்தின் மரபுரிமையாளர்கள் ஆக்கியிருக்கின்றன என்பது. கொழும்பில் பிறந்து வளர்ந்த நான் இன்று இந்தப் பதவியில் இருக்கின்றேன் என்றால் தமிழ் மொழி மீதும் என் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை மீதும் அவர்களின் குறிக்கோள்கள் மீதும் எனக்கிருக்கும் அளவு கடந்த பாசமும் பற்றும் பரிவுமே காரணம். நாம் உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் எம்மை எமது பாரம்பரியம் இயக்குகின்றது என்பதை நாம் மறத்தல் ஆகாது. “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று அன்று புலவர் கனியன் பூங்குன்றனார் கூறியது இன்றும் எமது பெறுமதி மிக்க தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. யாவரும் என் உறவுகள். அதாவது “யாவருங் கேளிர்” என்று கூற எந்தளவுக்கு எம் மனதில் மனித நேயம் குடி கொண்டிருக்க வேண்டும் என்று பாருங்கள். “யாதும் ஊரே” எனும் போது நில மடந்தையைக் கூறு போடாமல் அவளின் முழுமையான அழகுடன் அவளைப் பார்க்கும் பாங்கு தமிழ் மகனிடம் இருந்தது என்பதை நாங்கள் உணர வேண்டும். ஆகவே நாங்கள் எங்கிருந்தாலும் எப்பேர்ப்பட்ட நிலையில் இருந்தாலும் எவ்வகையான கட்சி பேதங்கள், கருத்து முரண்பாடுகள், வர்க்க பேதங்கள் கொண்டிருந்தாலும் நாம் யாவரும் ஒரு தாய் மக்களே என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே எனது முதலாவது வேண்டுகோள்.

அடுத்து நாங்கள் செய்நன்றி மறக்காத மக்களாக அடையாளங் காணப்பட வேண்டும். நாம் இன்று இந்த நிலையில் இருக்க பலர் ஒத்துழைத்துள்ளார்கள். உதவி செய்துள்ளார்கள். இன்று இருக்கும் நிலை என்று நான் கூறும் போது உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பிரித்தெடுத்து தனிப்பட்ட விதத்திலேயே குறிப்பிடுகின்றேன். செய்நன்றி மறக்காதிருத்தலையே குறிப்பிடுகின்றேன். செய்நன்றி மறக்காதிருத்தல் என்பது சுயநலங்களைவது என்றும் பொருள்படும். நாம் ஒரு நிலைக்கு வந்ததும் அந்த நிலைக்கு எம்மை ஏற்றிவிட்ட ஏணியைக் காலால் தட்டி விட எத்தனிக்கின்றோம். நான் இப்பொழுது பெரிய மனிதன், பெரும் செல்வந்தன், என்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இறுமாப்புக் கொள்கின்றோம்.

இது தேவையற்றது. உங்கள் ஒவ்வொருவரையும் ஒரு மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவர பல செயற்பாடுகள், பலரின் தியாகங்கள், பலரின் உடன்பாடுகள், பலவித சுற்றுச் சூழல்கள் போன்றவை இணைந்து உங்களுக்கு இந்த வரப்பிரசாதத்தை அளித்துள்ளது. ஆகவே வாழ்க்கைக்கு நன்றி செலுத்துங்கள், வந்தனைக்குரிய ஆண்டவனுக்கு நன்றியைச் செலுத்துங்கள், உங்களை ஈன்ற தாய் தந்தையருக்கு நன்றியைச் செலுத்துங்கள், அயலாருக்கு நன்றியைச் செலுத்துங்கள். அனுசரணை தந்த யாவருக்கும் அன்பு காட்டுங்கள். அதன் ஊடாக உங்கள் ஆணவம் கரையும். ஆணவமே எமது மக்களின் மேம்பாட்டுக்கும் இடமளித்தது. அவர்கள் வீழ்ச்சிக்கும் அதுவே வழியமைத்துள்ளது. இனியும் ஆணவத்துடன் நடந்து கொள்ளாது இருப்போமாக! இதைத்தான் புலவர் பூங்குன்றனார் புறநானூறில் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறினார். நாங்களே எங்கள் வாழ்க்கையை மேம்பட்ட வாழ்க்கையாக மாற்றக் கூடியவர்கள். நன்றி மறக்காது இருப்போமானால் நல்லதே நடக்கும். நன்றி மறந்தால் நாசமுறுவது திண்ணம். இதனை மறவாது இருப்போமாக!

மூன்றாவது விதண்டா வாதம் என்பது வெற்றியை அளிக்காது என்ற கருத்து, எதற்கும் நாம் எமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தால் வாழ்க்கை முன்னேறாது. உதாரணத்திற்கு எமது வடமாகாணசபையில் எம்மை எதிர்ப்பது எமது எதிர்க்கட்சியல்ல. எம்மைச் சார்ந்த சிலரே. கைவிட்டு எண்ணக் கூடிய சிலரே. வேற்றுமைகள் இருந்தால் அவற்றை எம்முடன் பேசித் தீர்க்காது மன்றத்தில் கொண்டு வந்து, பத்திரிகைகள் அறியச் செய்து, சந்தி சிரிக்க வைப்பதில் அவர்களுக்கு ஒரு அலாதிப் பிரியம். ஏதோ சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டோம் என்ற திருப்தி. இதனால் நாம் பாதிப்படையவில்லை. அவர்களே அடையாளங் காணப்பட்டு அருவருப்பு நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே எதனையும் விமர்சனத்திற்காக விமர்சிக்கும் இந்த விதண்டாவாதம் இனியாவது எமது தமிழ் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து தவிர்க்கப்பட வேண்டும். சேர்ந்து முடிவெடுத்தல், வேற்றுமைகளுக்குள்ளும் ஒரு ஒற்றுமையை அடையாளம் கண்டு அதன் வழி நடத்தல், மனிதாபிமான முறையில் முடிவுகள் எடுத்தல் போன்றவை தமிழ் மக்களின் புதிய பண்பாடாக மிளிர வேண்டும். முக்கியமாக எமது வடமாகாணத்தைத் தாயகமாகக் கொண்ட பலரிடத்திலும் இந்தக் குணம் அதாவது காரணமின்றி கடுமையாக எதிர்க்கும் குணம் குடிகொண்டிருக்கின்றது. அது தவிர்க்கப்பட வேண்டும்.

எமது அரசர்கள் ஆண்ட காலத்தின் பின்னர் தமிழ் மக்கள் மற்றவர்களின் ஆட்சியின் கீழேயே வாழ்ந்து வந்துள்ளார்கள். போர்த்துக்கேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் அதன் பின் சிங்களவர் என்று வாழ்ந்ததால் எதிர்ப்பு வாழ்க்கை எமக்கு பழக்கப்பட்டுவிட்டது. எமது ஆயததாரிகள் அதிகார பலம்கொண்டிருந்த காலத்திலும் மக்கள் வாய்திறக்க முடியாதவர்களாகவே வாழ்ந்தார்கள். இயக்கங்கள் கூறியதே சட்டமாக இருந்தது. ஆகவே வன்முறையற்ற வாக்குவாதம் பேசாத ஒரு சூழலை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அன்பும் புரிந்துணர்வுந்தான் அதனை வரவழைக்கக் கூடியது. எதிர்ப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து எம்தமிழ் மக்களிடையே இருக்கும் முரண்பாடுகளை முதலில் களைய முன்வருவோமாக!

ஆகவே நாங்கள் எங்கள் பாரம்பரியங்களின் மகத்துவத்தை உணர வேண்டும். மற்றவர்கள் எமக்களித்த நன்மைகளை நாம் மறத்தல் ஆகாது. செய்நன்றி மறக்கக் கூடாது. அடுத்து விதண்டாவாதம் பேசி எமது நல்வாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் உலை வைக்கக் கூடாது. இவ்வாறான மாற்றங்களை உலக ரீதியாக எம் தமிழ் மக்கள் தம்முள் வரித்துக் கொண்டார்களானால் சேர்ந்தியங்குவதில் எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படாது. செய்நன்றி மறவாதீர்கள் எனும் போது நீங்கள் புகுந்திருக்கும் இந்த நாட்டுக்கு நீங்கள் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று கருத்துப் படுகின்றது. உங்கள் புகுந்த நாட்டின் மீது பற்று வைத்து உலகளாவிய தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கையை ஒளியூட்டச் செய்வது கடினமன்று. உங்களுள் பலர் உங்கள் பழைய கல்லூரிகளை மறவாது பணம் அனுப்பி அவற்றைப் புனருத்தாரணம் செய்து வருகின்றீர்கள். செய்நன்றி மறக்கவில்லை நீங்கள் என்பது இதிலிருந்து புலனாகின்றது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக உங்களுள் பலர் வேற்றுமை பாராட்டி தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளீர்கள்.

இந்துக் கோயில்கள் பல இருப்பது நன்மை பயப்பதுதான். ஆனால் ஒரு கோயிலில் இருந்து பிரிந்து அக்கோயில் நிர்வாகத்தில் இருக்கும் மற்றவர்களுக்குப் பாடம் படிப்பிக்க இன்னொரு கோயில் கட்டுவது ஆணவத்தின் அம்சமாகவே எனக்குப் படுகின்றது. இதில் புதிய கோவில்களைக் கட்டுவதையோ, புதிய கட்சிகளை, அமைப்புக்களையோ தொடங்குவதை நான் குறை கூறவில்லை. உங்கள் காரியங்களுக்கு அடிப்படையாக அமைந்த ஆணவத்தையே சுட்டிக் காட்டுகின்றேன். விதண்டாவாதம் என்பதும் இதனையே குறிக்கின்றது. மறுக்க வேண்டும் என்பதற்காக மறுப்பதே விதண்டாவாதம்.

தமிழ்ப் பேசும் இனமானது எங்கிருந்தாலும் அதன் உறவுகளுக்குக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். பகைமை கடிந்து உலக ரீதியாக ஒற்றுமை வளர நாம் பாடுபட வேண்டும். எமது ஆணவங்களை நாம் அடக்க முற்பட்டோமானால் தானாகவே ஒற்றுமை எம்மை வந்தடையும். தன்னம்பிக்கை வேறு. ஆணவம் வேறு. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டும் முடியும் வேறெவரையும் அதைச் செய்ய விட்டுவைக்கலாகாது என்பது ஆணவம்.

இதனைக் கூறிவைத்து அடுத்த கட்டத்திற்கு வருகின்றேன்.

எமது வடமாகாணம் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாகியது. வடமாகாணசபை என்று பெருமையாகக் கூறினாலும் எமது அதிகாரங்கள் முடக்கப்பட்ட நிலையிலேயே நாம் எமது காரியங்களைக் கொண்டு நடத்தி வருகின்றோம். அரசர்கள் போனபின் முதன்முதலாக எம்மை சட்டப்படி நாம் ஆள முன்வந்திருப்பது இக்காலகட்டத்திலேயே எனினும் எமக்குக் கிடைத்திருக்கும் அதிகாரங்கள் பலவீனமானவையே.

உதாரணத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தில் ஒரு கையால் தந்ததை 1987ம் ஆண்டின் 15ம் இலக்க மாகாணசபைகள் சட்டம் மறுகையால் திருப்பிப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு உதாரணம் தருகின்றேன். இந்திய சட்டத்தின் கீழ் ஆளுநருக்குக் கொடுத்திருக்கும் அதே அதிகாரங்கள் 13ம் திருத்தச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டும் என்று 1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்பாட்டின்போது பேசப்பட்டாலும், ஆளுனரின் அதிகாரங்கள் இலங்கை அரசாங்கத்தால் வெகுவாகக் கூட்டப்பட்டன. எனவே ஆளுனரின் உள்ளீடல்களுக்கு இதுவரை சட்டம் இடமளித்து வந்துள்ளது. இது மாகாண விடயங்களில் மத்தியானது மூக்கை நுழைக்க வழி செய்துள்ளது. இவற்றை மாற்றும் விதத்திலேயே அரசியல் யாப்பு பற்றிய எமது கருத்துகளும் முன்மொழிவுகளும் அமைந்துள்ளன.

எமது மக்களின் தற்போதைய நிலைபற்றி நான் உங்களுக்கு கூறவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன். அண்மையில் நடந்த ‘எழுக தமிழ்’ பேரணியின்போது மக்களின் தாபங்கள், கோபங்கள், ஆசைகள், அபிலாசைகள், குறைகள் நிறைகள் பற்றியெல்லாம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எம்மைச் சூழவுள்ள பிரச்சனைகள் பற்றிப் பேசக்கூடியதாக இருந்தது. பௌத்தர்கள் வாழாத இடத்தில் புத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன் என்று கேட்டோம். இராணுவத்திற்கு வேண்டுமானால் அவர்களின் முகாங்களுக்குள் கட்டியிருக்க வேண்டும். ஆனால் மாறாக புத்த பிக்குமார் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளில் அத்துமீறிக் கட்ட இராணுவம் அனுசரணை வழங்கி வருவதன் மர்மம் என்ன என்று கேட்டோம். தோடர்ந்து எமது வளங்களைச் சூறையாடிக் கொண்டு இராணுவத்தினர் போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் எம்மத்தியில் என்ன செய்கின்றார்கள் என்று கேட்டோம். யுத்த கால குற்றங்கள் சம்பந்தமாக விசாரணை செய்ய உரியவாறு சர்வதேச நீதிபதிகளை கொண்டுவராதது பற்றியும், சர்வதேச வழக்கு நடத்துனர் ஒருவரை நியமிக்காதது பற்றியும் சர்வதேச போர்க்குற்றங்கள் எமது சட்டத்தினுள் உள் நுழைக்காதது பற்றியும் கேள்வி எழுப்பினோம். அரசியற் கைதிகளை விடுவியுங்கள் என்றும் காணாமற்போனோர் பற்றி அறிய உருப்படியான வழிமுறைகளை வகுக்காததன் மர்மம் பற்றிக் கேள்வி எழுப்பினோம். காணிகளை, எமது தோட்டங்களை, அரசாங்கக் கட்டடங்களை, தனியார் வீடுகளை எல்லாம் எப்பொழுது இராணுவம் விட்டுச் செல்லும் என்று வினவினோம்.

எமது வடமாகாண மீனவருக்கு தடை விதித்து தெற்கில் இருந்து வரும் தெற்கத்தைய மீனவர்களுக்கு எமது கடல்களிலும், உள்ளுர் நீர்நிலைகளிலும் சட்டத்திற்கு புறம்பான மீன்பிடி வழிமுறைகளைப் பின்பற்ற இராணுவமும் கடற்படையும் அனுமதித்து வருவது எந்த விதத்தில் நியாயமாகும் என்று கேள்வி எழுப்பினோம்.

இவ்வாறான பல விடயங்களை நாங்கள் மக்கள் சார்பில் எடுத்தியம்பினோம். பெருவாரியாக மக்கள் சேர்ந்துகொண்டது அரசாங்கத்திற்கும் எம்மவருள் சிலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சிங்களச் சகோதரர்கள் பழையபடி இனப்பிரச்சனையைக் கிளறப்பார்க்கிறார்கள் தமிழர்கள் என்று கூறினார்கள். தமிழர்களிற் சிலரோ சிங்களத்தலைவர்கள் சுமூகமான தீர்வைத் தர இருக்கும் நிலையில் ஏன் இந்த அவசரம் என்றார்கள். இரண்டு கூற்றுக்களுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இனப்பிரச்சனை இதுவரையில் தீர்க்கப்படவில்லை. துப்பாக்கி முனையில் இனப்பிரச்சனையை இதுகாறும் மறைத்து வந்துள்ளோம். ஒரு இலட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை எம்மிடையே இருக்கவைத்து வாய்;திறக்க முடியாது அமுக்கி வைத்திருந்தனர். இதுகாறும் இனப்பிரச்சனை தீராமல் இருக்கும்போது எவ்வாறு இனப்பிரச்சனையை நாம் கிளறிவிடுவது. மறைத்து வைத்ததை வெளியில் கொண்டு வருவது பிழையென்றால் தமிழர்கள் தங்கள் குறைகளை, குறைபாடுகளை வெளிக்கொண்டு வரக் கூடாது, நாங்கள் எதைத் தந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகும். சிங்களச் சகோதரர்கள் தமிழ்மக்களின் பிரச்சனைகளை அவ்வாறுதான் தீர்க்க இருக்கின்றார்களானால் அது தீர்ப்பது அல்ல தீர்த்துக்கட்டுவது ஆகும். ஆகவேதான் இன்றிருக்கும் ஜனநாயகச் சூழலை நாங்கள் பாவித்து எமது குறைகளை எடுத்தியம்பினோம். இதற்கு சிங்கள சகோதர சகோதரிகள் எமக்கு நன்றி கூறவேண்டும்.

எமது தமிழ்ச் சகோதரர்கள் ஏன் இப்போது என்று கேட்கிறார்கள். இப்பொழுது இல்லை என்றால் எப்போது என்று கேட்கிறோம் நாம். சுமூகமான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்தால் நாம் யாவரும் மனமகிழ்ச்சி அடைவோம். வரவேற்போம். அவ்வாறு ஒரு தீர்வை முன்வைக்காவிடின் எமது கதியென்ன? நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம், இவ்வளவுதான் தரலாம் என்பார்கள். அதன்பின் நாங்கள் பேரணி நடத்தினால் சட்டவிரோதம் என்பார்கள். நாட்டின் ஒற்றுமையை உருக்குலைக்கும் சதி என்பார்கள். ஆகவே எமது குறைகளை உலகம் கேட்கவைக்க நாம் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு தயாரிக்க முன்னரேயே எமது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டியிருந்தது. அதையே நாம் செய்தோம்.

அரசாங்கம் நெருக்குதல்களுக்கு மத்தியில்தான் சிறுபான்மையினருக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும். சௌமியமூர்த்தி தொண்டமானிடம் இருந்து நாங்கள் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மலையக மக்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற குடையின் கீழ் ஒன்று சேர வைத்தார். பின்னர் வேலை நிறுத்தம் என்ற நெருக்குதல் மூலம் சிங்கள அரசாங்கங்களைத் தமது மக்களுக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் கொடுக்க வைத்தார். எமது இளைஞர்கள் ஆயுதம் பிடித்தபோது எல்லாம் தருவோம் ஆனால் ஈலாம் இல்லை என்ற காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாச அவர்கள். ஆயுதகாலம் முடிவடைந்ததும், இப்பொழுது தருவோம், தருவோம் என்று காலம் கடத்துகின்றார்கள். எதுவுமே தந்தபாடில்லை. நெருக்குதல் இருந்தால்த்தான் மத்திய அரசாங்கம் எதனையும் கொடுக்க முன்வரும். தலைவர்கள் தருவதாகக் கூறினாலும் மக்கள் எதனையும் தர விடமாட்டார்கள். ஆகவே ஜனநாயக முறைப்படி எமது உரிமைகள் வென்றெடுப்பதாகில் நாங்கள் எங்களை குறைகளை ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டும்.

2013ம் ஆண்டு தேர்தலின்போது இதை நான் கூறியிருந்தேன். முதலில் எமது உரிமைகளைப் பேச்சுவாரத்தையூடாகப் பெற்றுக்கொள்ளப் பார்ப்போம். மறுத்தால் உலக அரங்கிற்குச் செல்லவேண்டி வரும் என்றேன். இதுவரை பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளை அந்தரங்கமாகவே வைத்துள்ளனர். அந்தரங்கம் வெளிவந்தால் ஒருவர் கூடிவிட்டது என்பார் மற்றவர் குறைந்துவிட்;டது என்பார். கூடிவிட்டது என்று கூறியவர்களுக்குப் பயந்து இவ்வளவுதான் தரமுடியும் என்பார்கள் அரசாங்கத்தினர். இதுவரை அதுதான் நடந்துள்ளது. உரிமைகளைப் பற்றிய விடயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். பலரின் அறிவுரைகளைப் பெறவேண்டும். தனித்துப் பேசிவிட்டுத் தான்தோன்றித்தனமாக அரசியல் யாப்பொன்றை எம்மீது திணிப்பதால் எந்த நன்மையும் கிடைத்துவிடாது. இவற்றை உத்தேசித்தே நாங்கள் மக்கள் பேரணி நடத்தினோம். ஆனால் பொருளாhதார ரீதியாக நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்தே செயலாற்றி வருகின்றோம். நாம் விதண்டாவாதம் பேச முனையவில்லை. அரசாங்கத்தோடு பன்னாட்டு உதவியுடன் வடமாகாண தேவைகள் பற்றிய கணிப்பீடொன்றைத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். பிரதமர் சார்பில் திரு. பாஸ்கரலிங்கம் அவர்கள் இதற்குப் பொறுப்பாக உள்ளார்.

போரின் பின்னரான எமது தேவைகள் என்ன என்று அறியாமல், எமது அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் நாம் பாரிய முதலீடுகளைக் கோருவதில் அர்த்தமில்லை. அதனால்த்தான் நாங்கள் தனிநபர் மேம்பாட்டுக்காக ‘உதவிப்பாலம்’ என்ற ஒரு அலகை அமைத்து எமக்கு அனுப்பப்படும் சிறிய தொகைகளைக்கூட நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவரப் பயன்படுத்துகின்றோம். வடமாகாண முதலமைச்சர் நிதியம் அரசாங்கத்தினால் அனுமதி தர தாமதம் அடைவதால் நாம் எமது உதவிப்பாலம் அலகை வைத்து எமது மக்களின் குறை தீர்;ப்பதில் முனைந்துள்ளோம். நீங்கள் ஒவ்வொருவரும் அதில் கலந்துகொள்ளலாம். எமது இணைய தளத்தில் உரிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவம் ஒன்றை தரவிறக்கம் செய்து அதில் உங்கள் விபரங்களையும் எவ்வாறான உதவிகளை மக்களுக்குக் கொடுக்க முடியும் என்பது பற்றி நீங்கள் எமக்குத் தெரியப்படுத்தினால் உதவி பெறுபவர்கள் பற்றிய விபரங்களை உங்களுக்குத் தந்து உரிய உதவிகளை, செயற்திட்டங்களை எமது அலுவலர்கள் செய்து முடித்து உங்களுக்கு விபரங்கள், படங்கள் போன்றவற்றை அனுப்புவார்கள். தற்போது அது சூமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இன்னமும் விபரங்களை வெளிப்படையாக வெளியிடவில்லை. தனிப்பட்ட முறையில்தான் கொடுத்து எடுத்து உதவிகள் செய்து வருகின்றோம்.

முதலமைச்சர் நிதியம் விரைவில் அனுமதிக்கப்படும் என எதிர்பார்கின்றோம். அதனுடன் சேர்;த்து இதுவரை நடைபெற்று வந்த உதவிப்பாலம் பற்றிய விபரங்களையும் வெளிப்படையாகத் தரவிருக்கின்றோம். அரசாங்கம் அந்த நிதியம் சம்பந்தமாக முட்டுக்கட்டைகள் வைத்தால் நாம் மீள் பரிசீலனை செய்வோம். உங்களில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்கள் என்பது எமக்குத் தெரியும். எனினும் களமறிந்து அரசாங்கத்தின் கருத்தறிந்து முன்னேறவே நாங்கள் விரும்புகின்றோம். எந்த விதத்திலும் மக்களுக்கு வரும் உதவிகளைப் பாதிப்படையச் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

எமது வலைத்தள விபரங்கள் வெளிவந்ததும் எம்முடன் இணைந்து மக்கள் நல செயற்திட்டங்களில் நீங்கள் பங்குபற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். இதே எதிர்பார்ப்பில்த்தான் நாங்கள் சில நாட்களுக்கு முன் கிங்ஸ்ரன் உள்ளுராட்சி மன்றத்துடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கிக் கைச்சாத்திட்டோம். பலவிதங்களில் நாங்கள் யாழ் மாவட்டத்திற்கு கிங்ஸ்ரன் உள்ளுராட்சி மன்றத்தின் உதவிகளைப் பெறவும் எமது கலை, கலாச்சாரம் சம்பந்தமான நிகழ்வுகளை இங்கு கொண்டுவந்து அறிமுகம் செய்யவும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அரசியலுக்கு அப்பால் எமது மக்களுடன் நீங்கள் யாவரும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்க வேண்டும் என்பதே எமது அவா. புலம்பெயர் தமிழர்கள் இலங்கை நாட்டின் பிரிவினையை வேண்டி நிற்கிறார்கள் என்ற கதையைக் கட்டிவிட்டு அவர்களுடன் நாம் உறவாடினால் எம்மைத் தீவிரவாதிகள் என்று அரசாங்கம் கருதும் என்ற பயத்தில் இதுவரை வெளிப்படையாக புலம்பெயர் மக்களை எமது உறவினர் தொப்புட் கொடி உறவு என்று கூற எமது மக்கள் பலர் பின்நின்றார்கள். நாம் வெளிப்படையாவே உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள் எமது உரிமைகளைப் பெற உங்களால் முடியுமான உதவிகளை நல்குங்கள் எனறு கேட்டு வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். மலையக தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளும் புறக்கணிப்புக்கள் காரணமாக தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. அவர்களுக்கான உட்கட்டுமான வசதிகள் முறையாக இன்னமும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. உரிய பாடசாலை வசதிகள் கூட பல பகுதிகளில் இல்லாமல் இருக்கின்றன.

தொடர்ந்தும் அம் மக்களின் வாழ்க்கை தரம் அடி மட்டத்திலேயே காணப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் மண் சரிவு இடம்பெற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்தபோது இந்த விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஆகவே மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உயர்த்தும் தார்மீக கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். அதற்கான பல வாய்ப்புக்கள் அங்கு இருக்கின்றன.
உலக நாடுகளுக்கு, உலகத் தலைவர்களுக்கு நாம் எமது நிலையை விபரமாக எடுத்தியம்பியதன் பின்னரே இவ்வாறு அறைகூறுகின்றோம். எமது நிலை பற்றி நீண்ட ஆவணங்களை எம்மைக் காணவந்த சகல தலைவர்களுக்கும் நாம் கொடுத்துதவியுள்ளோம். எமது நிலைபற்றி உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்றவை அறிந்திருக்கின்றன. எனவே எமது சகல நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடாத்தப்பட்டுவருவதால் எந்தப் பயமும் இன்று நாம் எமது கடமையில் ஈடுபட்டு வருகின்றோம். எமது மக்கள் யாவரும் இந்த உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் மனதால் இணைய வேண்டும் என்பதே எமது வேணவா. தனியொரு தமிழனுக்கு ஏதேனும் ஊறு விழைவிக்கப்ட்டால் ஜகம் யாவிலும் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்கும் காலம் விரைவில் வரவேண்;டும்.

ஆத்மீகத்தில் சகல மக்களையும் சேர்க்கும் விதத்தில் முழு சமுதாயத்தையும் சேர்க்கும் விதத்தில் பேசிய நீங்கள் தமிழர்கள் என்று பேச விழைவது சரியா என்று ஒருவர் கேட்டார். ஒரு கல்லூரியில் அதிபர் அக்கல்லூரி மாணவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றால் முதலில் ஒற்றுமைரய வகுப்பறைகளிலேயே கொண்டுவருவார். வகுப்பில் ஒன்று சேரும் மாணவர்கள் மற்றைய வகுப்புகளுடன் ஒன்று சேர்வார்கள். பின்னர் கல்லூரி ரீதியாக ஒன்று சேர்வார்கள். உலக ஒற்றுமைக்கு முதற்படி இன ஒற்றுமை. எனவேதான் தமிழ்மொழியும் அதன் பாரம்பரியங்களும் எம்மை இணைக்கட்டும் என்று முன்னர் கூறினேன். இங்கு சில தமிழர்களுக்குத் தமிழ் தெரியாது. அதுபற்றிப் பரவாயில்லை. ஆங்கிலத்தில் எமது மொழி பற்றியும், பாரம்பரியம் பற்றியும், வரலாறு பற்றியும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். தமிழ் மீதான ஆர்வம் தானாகவே வரும்.

இன்று என்னை எனது பிறந்த நாளில் அழைத்து உங்கள் முன் பேசச் செய்த விழா ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

Related Posts