இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 4–0 என இழந்துள்ளதால், உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கலை சந்தித்துள்ளது.
ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் 87 புள்ளிகளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்திலும், 78 புள்ளிகளுடன் மே.இ.தீவுகள் அணி 9ஆவது இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து அணி போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், நேரடியாக உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறுவதுடன், ஏனைய 7 அணிகளும் தரப்படுத்தலின் அடிப்படையில் நேரடியாக உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் இலங்கை அணி 4–0 என தொடரை இழந்துள்ளது. ஒருவேளை இலங்கை அணி நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றிபெறுமாயின் 88 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும்.
இவ்வாறு பெற்றுக்கொண்டாலும் உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுவதில் இலங்கை அணி சிக்கலை எதிர்நோக்கும்.
ஏனெனில் மே.இ.தீவுகள் அணி அயர்லாந்து அணிக்கெதிராக ஒரு ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கெதிராக 5 ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளது.
இதில் அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்று, இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை 5–-0 என கைப்பற்றுவதனூடாக மே.இ.தீவுகள் உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும்.
இதேவேளை இலங்கை அணி இறுதிப் போட்டியில் தோல்வியுறும் பட்சத்தில் மே.தீவுகள் அணி இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை 4–-1 என கைப்பற்றினாலும் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.