முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை இழந்து, இரு பிள்ளைகளையும் தொலைத்துவிட்டு வாழும் ஒரு தாய்க்குச் சொந்தமானது. எனினும், இக்காணிக்கு உரிமை கோரி பிறிதொரு நபரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வை பெற்றுத்தரவில்லையென பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கின்றார்.
குறித்த காணி தனது கணவனுடையதென தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட பெண், கடந்த 1982ஆம் ஆண்டு முதல் அதனை தாமே பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, நீதிமன்ற விசாரணையில் உள்ள காணியை, நீதிமன்ற செயற்பாடுகளையும் மீறி அரச அதிகாரிகள் அபகரித்து அடிக்கல் நாட்டியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவிக்கப்பட்டபோதும், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவில்லையென பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஏற்கனவே மக்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் பராமரித்து வரும் இவ்வாறான காணிகளையும் அரச அதிகாரிகளைக் கொண்டு அரசாங்கம் அபகரித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.