உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு நினைவு தினம் அனுஸ்டிக்க உரிமையுண்டு -சி.வி.கே

CVK-Sivaganamஉறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க உரிமையுண்டு என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இயல் இசை நாடக விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

‘எந்த சட்டத்தாலும் அடக்குமுறையாலும் ஒரு மனிதனின் தோன்றாப்பொருளாக இருக்கும் உள்ளுணர்வைக் கட்டுப்படுத்த முடியாது’ .அதேபோல தமிழ் மக்களின் உணர்வுகளும் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் நிறைந்த யாழ். பல்கலைக்கழகம் இன்று அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

நம் சமூகத்தில் உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்த மே மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். தனிப்பட்ட ரீதியில் எனது குடும்பம் கூட பாதிக்கப்பட்டுள்ளது.அதேவேளை வட மாகாணத்தில் தேசிய வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் உயிர் நீத்த எம் உறவுகளுககாக கண்ணீர் விடவோ நினைவுகூரவோ முடியாமல் உள்ளோம். என்றாலும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் எமது உணர்வுகளை வெளிக்காட்டவே செய்வோம்.

இனிமேல் நாம் தலைநிமிர்ந்து நிற்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது என நான் நினைக்கின்றேன். மேலும் கலை கலாசாரம் மூலமாக எமது பண்பாடுகள் , விழுமியங்கள் மீண்டும் மிளிர ஆரம்பித்துள்ளதை நான் பார்க்கின்றேன்.

எம்மண் வன்முறை உணர்வாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. இதனை நீக்கவும் எம்மைக் காத்துக்கொள்ளவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts