உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது.

may 18 vicky mulliththevu

இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக உலகத் தமிழர்கள் பிரகடனப்படுத்தி அதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இதன்படி வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் தமிழ் சிவில் சமுகம்,மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது.

இன்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதான நினைவுச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர்கள் அரசியல் பிரதிநிதிகளாலும், சிவில் அமைப்பு பிரதிநிதிகளாலும் ஏற்றி வைக்கப்பட்டன.

தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடங்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபதித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடித்தனர். பிரதான மண்டபம் முன்னே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related Posts