எமக்கான சரியான தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என, சுன்னாகம் சிவன் கோவில் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீருடன் சேர்வதால், வலி. வடக்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள 800க்கும் அதிகமான கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளது.
அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர்.
அதில் ஒரு அங்கமாக கடந்த மூன்று நாட்களாக சுன்னாகம் சிவன் கோவில் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம் நேற்றையதினம் கொழும்பில் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தது.
அச் சந்திப்பின் முடிவில் அமைச்சர் குறித்த மின் நிலையத்தை மூடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டார். இதனால் மாத்திரம் எமது பிரச்சினை தீர்ந்து விட போவதில்லை.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அனர்த்த பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெய்யை அகற்றவதற்கான பொறிமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீரினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மற்றும் குறித்த நிறுவனத்தை நிரந்தரமாகவே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவையனைத்தும் எழுத்து மூலமான உறுதிமொழியாக எமக்கு வழங்கப்பட வேண்டும். அதுவரை எமது போராட்டம் தொடரும், என்றனர்.
நேற்றய தினம் நடைபெற்ற போராட்டத்தின் சில காட்சிகள்