எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில் தற்போது மாவட்டத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இரண்டு வேளை சாப்பிடுகின்ற இனிவரும் நாட்களில் ஒருவேளை என மாறும் முன்னர் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ம் ஆண்டின் பின்னர் வறுமை நிலையில் பல குடும்பங்கள் தொடர்ச்சியாக நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக வறுமை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்கள் போன்று போதியளவு தொழில் வாய்ப்புகள் இன்மையால் கிளிநொச்சியின் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனறு தெரிவிக்கும் மக்கள் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இது தொடர்பில் அக்கறைச் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
போர் காரணமாக உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டன. மீள் குடியேற்றத்தின் பின்னர் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள், தற்காலிக வீடுகள் என்பன கிடைக்கப் பெற்ற போதிலும் பல குடும்பங்களுக்கு தமது வாழ்க்கையை கொண்டு நடாத்தக் கூடிய பொருளாதார பலம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
கிராமங்களில் தொழில் வாய்ப்பின்மை காரணமாக கிளிநொச்சி நகரத்தையும் பிற மாவட்டங்களையும் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பிற்காக நாடிச் செல்கின்றனர். கிராமங்களில் உள்ளவர்கள் கிடைக்கின்ற தொழிலை மேற்கொண்டு வாழ்க்கையை நடாத்துகின்ற நிலைமை கூட இன்மையால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக மாணவர்களின் கல்விக்காக வறுமையான நிலையில் வாடுகின்ற குடும்பங்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வறுமையான குடும்பங்கள் கூடுதல் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.