தமிழ் மக்களின் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணி உரிமை மற்றும் காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் நேற்றய தினம் (வெள்ளிக்கிழமை) யாழில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே தற்போது அவசியம் எனவும் கூறினார்.
தற்போதைய கால கட்டத்தில் தமிழ் தலைமைகள் கூறுவதற்கும் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வேலையில்லாத பிரச்சனை தொடர்பில் சம்பந்தன் எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றார், ஆனால் சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றுக்கொடுக்க முடிவது எவ்வாறு எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமக்கு வாக்களியுங்கள் என கோரி பல சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால் அவர்கள் எதனை செய்தார்கள்? அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான நிலையில் உரிமையை காகிதத்தில் வாங்கி என்ன செய்ய முடியும் எனவும், அதனால் அபிவிருத்தியுடன் கூடிய உரிமையே மக்களுக்கு அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.