உரிமையாளர்கள் இல்லாத காணிகளே சுவீகரிக்கப்படுகிறது!- பொலிஸ் அத்தியட்சகர்

meeting_jaffna_police_jeffreeyயாழ். மாவட்டத்தில் பொலிஸார் நிலைகொண்டுள்ள காணி உரிமையாளர்கள் இனங்காணப்படாததை அடுத்தே அக் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார்.

பொலிஸார் நிலைகொண்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இருப்பின் அவர்கள் அந்தந்தப் பகுதி பிரதேச செயலர் அல்லது அரச அதிபருடன் தொடர்பு கொண்டு சுவீகரிப்புக்கு எதிரான முறைப்பாடு செய்தால் அவ் முறைப்பாடுக்ள தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் பொரும்பாலும் பொது மக்களுடைய வீடுகளிலேயே உள்ளது.

அவ்வாறு அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் தேவைகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நெல்லியடி மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களின் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அறிவித்தல்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

ஏனைய பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள காணிகளும் பொலிஸ் தேவைகளுக்காக சுவீகரிக்க வேண்டும் என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த எஸ்.எஸ்.பி:-

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் அரச காணிகளில் இல்லாத காரணத்தினால் பெரும்பாலும் பொது மக்களுடைய காணிகளில் தான் இருக்கின்றது. அக் காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் காணமுடியாதுள்ளது.

இதனால் தான் அக் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு கோரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சட்ட விதிமுறைகளின் படியே செயற்படுத்தப்படுகின்றது.

குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இங்கு இருப்பின் அவர்கள் அவ் விடயம் தொடர்பாக அந்தந்தப் பகுதி பிரதேச செயலர் ஊடாக அரச அதிபருக்கு முறைப்பாடுகளைக் கொடுக்கலாம்.

அவ் முறைப்பாடுக்ள தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts