உயிர் பலியிடுதல் சமயநெறிக்கு முரணானது – சைவ மகாசபை

யாழ். பண்டத்தரிப்பு, பிரான்பற்று ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்ற உயிர் பலியிடுதல் சம்பவம் தமது சமயநெறிக்கு முரணான, வருந்தத்தக்க செயலாகும் என சைவ மகாசபை தெரிவித்துள்ளது.

velvi 3

யாழ்ப்பாணத்தில் உள்ள  ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் வேள்வி தொடர்பில் சைவ மகாசபையால் ‘உயிர் பலியை நிறுத்துவோம், ஜீவகாருண்யம் காப்போம்’ என்னும் தலைப்பில் திங்கட்கிழமை (19) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘எமது சமயம் ‘அன்பே சிவம்’ என்கின்ற உயரிய கோட்பாட்டை உடைய தன்னுயிர் போல மன்ணுயிர் ஓம்புகின்ற உன்னத வழிபாட்டு நெறியைக் கொண்டுள்ளது.

எல்லா உயிர்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கின்றான் என்கின்ற உயரிய விழுமியத்தின் அடிப்படையில் பிராணிகளையும் தாவரங்களையும் பூஜிக்கின்ற, வழிபாட்டு மரபை பின்பற்றுகின்ற சைவநெறியில் தங்கள் சுயலாபத்திற்காக ஒரு சிலரினால் இடையில் புகுத்தப்பட்ட பலியிடுதலானது, எமது சைவ ஆகம மரபிற்கும் மற்றைய உயிர்களை துன்புறுத்தக்கூடாது என்ற வகையில் நாம் பின்பற்றும் சைவ உணவுப் பழக்கத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட செயற்பாடாகும்.

ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர், சைவப்பெரியார் சிவபாதசுந்தரம், ஜீவகாருண்ய திருவருட் பிரகாச வள்ளலார் போன்ற பெரியார்கள் இடையில் புகுந்து,  இந்த உயிர்களை துன்புறுத்தும் கொடிய வழக்கத்தை தங்களுடைய சீரிய திருமுறைகளை மேற்கோள் காட்டி விளக்கங்களுடன் பல இடங்களில் இல்லாது ஒழித்தனர்.

உண்மையில் வேள்வி என்பது கந்தபுராணம் கூறுவதுபோல் ‘குறைவில்லாது உயிர்கள் வாழ்க’, ‘நற்றவம் வேள்வி மல்க’, ‘மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்’ எனக் கூறி யாகம் வளர்த்து அவிப்பொருள் சொரிந்து இறைவனை மனம், மொழி,  மெய்யினால் வழிபடும் உன்னத முறைமையே அன்றி, குறைவிலாது உயிர்களை வாழ வைக்கவேண்டிய நாங்கள் அவற்றை பலியிடுதல் அன்று.

ஆனால், இன்று சிவபூமி எனப்படும் எமது நாட்டில் வலிகாமம் பகுதியில் மட்டும் மிகச் சில ஆலயங்களில் நடைபெற்று வரும் இச்செயல் முழு ஜீவகாருண்யத்தை நேசிக்கின்ற சைவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மேற்படி ஆலயத்தை தொடர்ந்து கடந்த வருடம் முதல் பலியிடுதலை நிறுத்துகின்றோம் என உறுதியளித்த சில ஆலயங்களும் பலியிடுதலை மேற்கொள்ள தயாராகி வருகின்றமையும் அதற்கு சில பிரதேச சபைகள் உறுதுணை புரிய முயற்சிக்கின்றமையும் மேலும் வேதனை தருவதாக உள்ளது.

இந்தக் கொடிய வழக்கம் கைவிடப்படவேண்டும் என்பதில் இலங்கையில் சைவ சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதீனங்கள், குருமார்கள், சமய அமைப்புக்கள் எவற்றிற்கும் மாறுபட்ட கருத்துக்கிடையாது என்பதையும் இதனை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரம் உடைய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த காலங்களில் பல தடவைகள் கோரிக்கை முன்வைக்கப்பட்டமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆதலினால் வருகின்ற வாரங்களில் மிகப்பெருமளவில் பலியெடுப்புடன் இன்னும் சில ஆலயங்களில் நடைபெற இருக்கின்ற உயிர்ப்பலியை தடுத்து நிறுத்துமாறு சைவப்பெருமக்களின் பெருவாரியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கும்  முதலமைச்சரும் இவற்றுடன் தொடர்பான பிரதேச சபைகளின் உள்ளூராட்சி  சட்ட அமுலாக்கல் செய்கின்ற உள்ளூராட்சி  அமைச்சரும் நாம் மதிக்கின்ற ஆன்மீக பெரியவருமாகிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை  சைவப்பெருமக்கள் சார்பாக வேண்டி நிற்கின்றோம்.

அதேநேரம், உண்மையான இறைபக்தியை உடைய பலியிடுதலை தவறாக புரிந்து வைத்திருக்கின்ற கிராமிய அன்பர்களிடம் நாம் வேண்டுவதென்னவெனில்,  இன்னொரு உயிரை எமக்காக எனக் கூறி எல்லா உயிர்களுக்கும் பொதுவான இறைவன் சந்நிதியில் பலியிடுதலை தவிர்த்து உண்மையான கிராமிய வழிபாடான இன்றும் வற்றாப்பளை அம்மன், புளியம்பொக்கணை,  புத்தூர் நாகதம்பிரான் போன்ற அருள் நிறைந்த கிராமிய ஆலயங்களில் நடைபெறுவது போல பொங்கல் பொங்கி,  மடை பரப்பி, ஆடிப்பாடி இறைவனுக்கு படைத்து நாமும் உண்டு ஏனைய ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் முறைமையாக எமது வேள்வியை மாற்றிக் கொள்வோம்.  அப்போதுதான் இறைவன் எம் வழிபாட்டை அகமகிழ்ந்து ஏற்று, எமக்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் தன் தெய்வீக அருளை அள்ளி வழங்குவான்’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts