அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் கடிதத்தை பொலிஸார் உள்ளிட்ட சில தரப்பினர் மூடி மறைக்க முயற்சித்து வருவதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதிகள் தமக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு கடிதம் கிடைக்கவில்லையென பொலிஸ் தரப்பினர் கூறி வருவதில் எவ்வித நியாயமும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாணவனின் தற்கொலையானது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், இதனை வெறுமனே ஒரு தற்கொலையாக சித்தரிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக தாம் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் சிலரை மாத்திரமே விடுதலை செய்தமையானது குறித்த மாணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தற்போது மாவீரர் தினமும் அனுஷ்டிக்கவுள்ள நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்றும், எனினும் இவ்வாறான விடயங்களை ஊக்குவிக்க முடியாதெனவும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், இவ்வாறான செயற்பாடுகள் வேறு விடயங்களுக்கு வழிவகுக்குமென்றும் எச்சரித்துள்ளார். குறித்த மாணவனின் தற்கொலையானது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துமென தெரிவித்த அவர், கைதிகள் விடயத்தில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மேலும் தெரிவித்தார்.