உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

anjalyசர்வதேச ஊடக தினமான நேற்று உயிர் நீத்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ரி. வினோஜித் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நிறைவேற்று அதிகாரி வில்லியம் சுகுமார் றெக்வுட் மற்றும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரி அமீன் ஹுசைன் ஆகியோர் உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

அதன்போது, யாழ். ஊடகவியலாளர்களும் அஞ்சலி செலுத்தியதுடன், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நிறைவேற்று அதிகாரிகள் பத்திரிகையாளருடன் சந்தித்து கலந்துரையாடினார்.

அதேசமயம் ஊடக அமையத்தினால் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து ஒரு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இலங்கையின் வடபுலத்தில் ஊடகங்கள் மீது மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், சுந்திரமான ஊடகப் பணிகளை கேள்விக் குறியாக்கியுள்ளது. குறிப்பாக இவ்வாண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியினுள் மட்டும் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் ஊடகவியலாள் இருவர் கொலை முயற்சிக்குள்ளாகியிருக்கின்றார்.

மூன்று வெவ்வேறான சம்பவங்களில் ஊடகப்பபணியாளர்கள் ஜவர் தாக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனமொன்றின் அச்சியந்திரம் தீயிடப்பட்டுள்ளது. அதே போன்று மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்களில் விநியோ கத்திற்கென எடுத்துச்செல்லப்பட்ட நாளிதழ்களின் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்றுதாக இலங்கை அரசு அறிவிப்பை விடுத்திருந்த 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியின் பின்னராக ஊடகங்கள் மீதான வன்முறைகள் ஓரளவிற்கேனும் ஓய்ந்து போகுமென்ற எதிர்பார்ப்பு ஊடகவியலாளர்களிடையே காணப்பட்டது.

ஆனாலும் எதிர்பார்ப்புகளுக்கப்பால் இப்போது பிரதான இலக்குகளாக ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களுமே முன்னிறுத்தப்படுகின்றமை பரிதாபகரமானதொன்றே. இலங்கை முழுவதுமாகவே ஊடகங்கள் மீதான நெருக்குவாரங்கள் தற்போதும் முனைப்புப்பெற்றேயுள்ளது. இலங்கை அரசு விடுவித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும், வன்னியில் ஊடகவியலாளர்களுக்கான கதவுகள் இழுத்து மூடப்பட்டேயுள்ளது.

அது உள்ளுர் ஊடகவியலாளர்களை விட, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும், சூழலில் கூட அந்நிலையில் மாற்றமின்றியே இருக்கின்றது. வடக்கில் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதுமாக தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. இவ்வாறு குற்றவாளிகள் தண்டிக்கப்படாமையும், தொடரும் தாக்குதல் களிற்கான காரணங்களில் முதன்மையானதாக இருக்கலாம். கடந்த இரண்டு தசாப்த காலமாக தொடரும், ஊடக அடக்குமுறைமைகளால் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.

இன்றும் பலர் ஊடகப் பணியிலிருந்து விலகியோ, நாட்டைவிட்டு வெளியேறியோவுள்ளனர். அவர்களுள் காணமல் போன ஊடகவியலாளர்களது நிலை இன்று வரை மர்மங்கள் நிறைந்ததாக இருந்துவருகின்றது.

இன்றைய ஊடக சுதந்திர தினத்தினில், நெருக்கடிகள் மத்தியிலும் யாழ்ப்பா ணத்திலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களது கூட்டிணை வான யாழ். ஊடக அமையம் சர்வதேச சமூகத்திடமும், இலங்கை அரசிடமும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.

1. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக ஊடகப்பணிகளை ஆற்றுவதற்கான புறச்சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.

2. ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

3. காணமல் போன ஊடகவியலாளர்களது நிலை பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவேண்டும்.

4. கொல்லப்பட்ட, காயம் விளைவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடகப்பணியாளர்களுக்கும் உரிய நஷ்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும். காணாமல் போன ஊடகவியலாளர்களது குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

5. அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு புலம்பெயர்ந்துள்ள, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை அடைக்கலம் புகுந்துள்ள நாடுகள் பாதுகாக்க வேண்டும்.

Related Posts