உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை மாவீரர் தின நினைவேந்தல்களை நடத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அரச தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய போரில் போராளிகள், பொதுமக்கள் என இலட்சக் கணக்கானோர் தம்முயிரை அர்ப்பணித்துள்ளனர். அவ்வாறு உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இவ்வுரிமை மனங்களுக்கும், ஆன்மாக்களுக்கு ஆறுதல் தரும் விடயமாகும்.
மத நம்பிக்கை கொண்ட மக்கள் உயிர்நீத்த உறவுகளின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், ஈமைக்கடன் செய்வதும் அவரவர் நம்பிக்கைக்கு உரியதாகும்.
எனவே இதனை யாராலும் தடுக்க முடியாது. எனவே நாட்டின் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு கோவில்கள், வீடுகள், நீர் நிலைகள் மற்றும் நினைவிடங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.