தொழிலின் போது கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விவரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டிவருகிறது.
கடலில் தொழில் செய்யும்போது உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வடமாகாண கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவுதொகையாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. இதற்கமைய கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுகின்றன.
கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள், விண்ணப்பப் படிவங்களை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து பெற்று, பூர்த்திசெய்து மரணச்சான்றிதழுடன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களினூடாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளயாளரிடம் கையளிக்கவேண்டும்.
இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி இம் மாதம் 24ஆம் திகதி ஆகும். இதேவேளை, பனையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு இலட்சம் ரூபாயை வடமாகாண கூட்டுறவு அமைச்சு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.