உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு

வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர்.

கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அழிக்கப்படும் வீடுகளில் இருக்கும் ஓடுகள், கூரை மரங்கள், சீமெந்துத் தூண்கள், கற்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை, மறைவான ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது.

உயர்பாதுகாப்பு வலையத்துக்குள் உள்ள மக்களின் வீடுகளில், இராணுவத்தினர் தமது படை முகாங்களை அமைத்து நிலைகொண்டுள்ளனர். உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள வீடுகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், அந்த வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வெளியேறும் இராணுவத்தினர், தாம் நிலைகொண்டிருந்த வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் பொது மக்களின் சொத்துக்கள், இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts