உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.
மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா? என்று அவரிடம் வினாவியபோதே, அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆகியோருடன் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கமைய தற்பொழுது மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் வகையில், எவரும் நடந்து கொள்ளக்கூடாது.
1990ஆம் ஆண்டு வலி.வடக்குப் பிரதேசத்தை, இராணுவம் கைப்பற்றி 45 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து மக்களை வெளியேற்றியது தொடர்பில் அனைத்து ஆவணங்களும் எம்மிடம் உள்ளன. 2003ஆம் ஆண்டு எனது பெயரிலும் மேலும் இருவரது பெயரிலும் உயர் நீதிமன்றத்திலும் மேல் நீதிமன்றத்திலும் வழக்கொன்றைத் தாக்கல் செய்தோம்.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையிலான குழுவினர் மீள்குடியேறுமாறு இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கினார்கள். இது தொடர்பில் 2 ஆயிரத்து 176 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சொந்தமான இடங்களும் அடங்கும்.
இந்தப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த 26 ஆயிரம் குடும்பங்களில் 17 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியமர்த்தும் வகையில், தேவையான காணி உறுதிகள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. எனது காணியும் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன், இது தொடர்பில் நாங்கள் 2011ஆம் ஆண்டு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, பலாலி விமானத்தளம் வரையான பகுதி வரை மக்களை மீளக்குடியேற்றம் செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இவையாவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களை அடுத்து இடம்பெற்றவையாகும்.
இந்தப் பிரதேசத்திலேயே ஆடம்பர ஹோட்டல்கள், யோகட் தொழிற்சாலை, இராணுவ தளபதிக்கான ஆடம்பர இல்லம், கொல்ப் மைதானம் என்பன அடங்குகின்றன. மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை சுவீகரித்து கடந்த அரசு இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது.
சுவீகரிக்கப்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமானவர்களின் விபரங்கள், வரைபடங்கள், ஆவணங்கள், காணி உறுதிகள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் நானும் இணைந்து இவற்றை புதிய அரசிடம் கையளித்துள்ளோம்.
அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. இது குறித்து தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனுடன் இது குறித்து கலந்துரையாடினோம்.
புதிய அரசு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுள்ளது. அது தொடர்பில் ஏற்கெனவே பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
திருகோணமலை சம்பூர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்ட தனியார் காணிகள் குறித்த மக்களிடம் மீளக்கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான சகல விடயங்களும் எம்மிடம் உள்ளன. மேலும் ஒரு சிலர் மீள்குடியேற்றம் குறித்து விவரங்களை சேகரித்து வருவதாகவும் முன்பின் முரணான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறான போக்குகள் பாதகமான விளைவையே ஏற்படுத்துவதாக அமையும்’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.