வலி.வடக்கில் ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து உயர்பாதுகாப்பு வலைய எல்லையினை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள இராணுவத்தின் ஹொட்டல் மற்றும் துறைமுகங்களுக்குச் செல்பவர்களினை சோதனையிடும் சோதனைச்சாவடியும் இதன் போது பின்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள வலி.வடக்குப் பகுதிகளில் இருந்து மேலும் ஒரு தொகுதி காணிகள் கடந்த 12 ம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுடன் கூடிய 109 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள நடேஸ்வராக் கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் கையளித்திருந்தார். அத்துடன் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள பாடசாலைகளையும் அதிபர்களிடம் கையளித்திருந்தார்.
இருப்பினும் இறுதியாக பாடசாலைகளுடன் கூடிய 109 ஏக்கர் நிலப்பரப்பிலும் மக்கள் உடனடியாக மீள்குடியேறிக் கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ முகாங்களினை அகற்றப்பட்டு மக்கள் குடியேற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
இதன்படி அப்பகுதிகளில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதோடு, உயர்பாதுகாப்பு வலய எல்லைகளையும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் காங்கேசன்துறை வீதி மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் அமைந்துள்ள இராணுவத்தின் சோதனைச்சாவடியும் சுமார் ஒரு கிலோ மீற்றர் பின்னகர்த்தப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் உயர்பாதுகாப்பு வலய எல்லையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
காங்கேசன்துறை வீதியில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லை பின்னகர்த்தப்படும் போது பாடசாலைகள் உட்பட வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனை உள்ளிட்டவற்றுக்கும் பொது மக்கள் சுதந்திரமாகச் சென்று வரக்கூடிய நிலமை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.