கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் இடம்பெறும் போதே அந்த பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பரீட்சை பெறுபேறுகளை துரிதமாக வெளியிட எதிர்பார்க்கின்றோம்.
முதலாம் கட்ட விடைத்தாள் திருத்த பணிகள் நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. மீண்டும் 10ஆம் திகதி, 18ஆம் திகதி, பெப்ரவரி முதலாம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இப்பணிகள் முன்னெடுக்கப்படும். ஏப்ரலில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். எனினும் தினத்தை எம்மால் தற்போது ஸ்திரமாகக் கூற முடியாது. புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முயற்சிக்கின்றோம்.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆழமாக மதிப்பாய்வு செய்து வருகின்றோம். விரைவில் இது குறித்த தீர்மானமொன்றை எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம். தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு பரிந்துரையையும் எம்மால் முன்வைக்க முடியும்.
எதிர்வரும் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் 3000க்கும் மேற்பட்ட ஆரம்ப பாடசாலைகள் உள்ளன. அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் 6ஆம் தரத்துக்காக வேறு பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். எனவே இவ்வாறான காரணங்களை கவனத்தில் கொண்டு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண முயற்சிக்கின்றோம் என்றார்.