க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சை ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் தகவல் தருகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சையின்போது பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சார்த்திகள் எக்காரணம் கொண்டும் கையடக்கத் தொலைபேசிகளையோ ஸ்மார்ட் கைக்கடிகாரத்தையோ அல்லது வேறேதும் இலத்திரனியல் உபகரணங்களையோ வைத்திருந்தால் அவை கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்படும். அத்துடன் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளும் நிறுத்தப்படும்.
எதிர்வரும் 5 வருடங்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்றுவதற்கும் தடை விதிக்கப்படும்.
இதனை அவதானிப்பதற்கு பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய நான்கு குழுக்களும், வலயமட்ட குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. தவறிழைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதும் தடைசெய்யப்படும்.