Ad Widget

உப பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் அட்டகாசம்

பருத்தித்துறை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, நேற்று சனிக்கிழமை (03) அதிகாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் முன் கதவினை உடைத்து அத்துமீறி நுழைந்த பருத்தித்துறைப் பொலிஸார் வீட்டிலுள்ள அனைவரையும் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் அதிகாலையே மதுபோதையில் குறித்த நபரின் வீட்டுக் கதவினை அத்துமீறி உடைத்து உள்ளே வீட்டின் உள்ளே சிலர் செல்ல முற்பட்டுள்ளனர்.

தம்மை பருத்தித்துறைப் பொலிஸார் என அறிமுகப்படுத்தியவர்கள் சிவில் உடையில் காணப்பட்டிருந்தனர்.

படுக்கையில் இருந்த வீட்டின் குடும்பஸ்தரைக் கைதுசெய்யமுற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் யார் நீங்கள்? என வினாவிய போது, தாம் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்துள்ளதாகவும், நீதிமன்றினால் கைதுசெய்யுமாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அடாவடியில் ஈடுபட்டு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், பூஜை அறைக்குள் சப்பாத்துக் கால்களுடன் செல்ல வேண்டாம் என வீட்டில் இருந்தவர்கள் கூறிய போது, தலையில் துப்பாக்கியினை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

குழந்தை பிறந்து 28 நாட்கள் ஆகியுள்ளதாகவும், குழந்தைக்குப் பக்கத்தில் சப்பாத்து கால்களுடன் வரவேண்டாம் என வீட்டில் உள்ளவர்கள் கூறத் தகாத வார்த்தைகளினால் குறித்த உப பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டிலிருந்தோரை ஏசியுள்ளார்.

மேலும் கைதான குடும்பஸ்தரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்துவதாகக் கூறி அழைத்து சென்றவர்கள், மாறாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மதுபோதையில் அதிகாலை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தமை, சரியான காரணம் எதுவும் கூறாமல் அழைத்துச் சென்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

Related Posts